சேலம் அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடத்த மாணவர்களிடம் வசூல்
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடத்த மாணவர்களிடம் வசூல்
UPDATED : ஏப் 11, 2013 12:00 AM
ADDED : ஏப் 11, 2013 08:38 AM
அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்ற விழாவை நடத்த, மருத்துவக்கல்லூரி நிர்வாகம் முயற்சி எடுக்காமல், மாணவர்களிடம் வசூல் செய்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
சேலம் இரும்பாலை ரோட்டில், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி உள்ளது. ஐந்தரை ஆண்டு படிப்புடைய, எம்.பி.பி.எஸ்., மூன்று ஆண்டு படிப்புடைய, எம்.டி.,- எம்.எஸ்., உள்ளிட்டவற்றில், ஒவ்வொரு ஆண்டும், மாணவ, மாணவியர் சேர்க்கை நடக்கிறது.
எம்.பி.பி.எஸ்., டாக்டர் படிப்புக்கு, 75 பேர் வரை சேர்க்கை நடக்கும். மற்ற எம்.டி.,- எம்.எஸ்., பிரிவுக்கு, ஆறு பேர் வரை சேர்க்கப்படுவர்.நான்கரை ஆண்டு காலம், கல்லூரி படிப்பை முடித்துர தேர்ச்சி பெற்ற பின், அரசு மருத்துவமனையில் டாக்டர் பயிற்சி பெறுவர். அப்போது, மாதந்தோறும், 8,000 ரூபாய் வீதம், அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
சமீபத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்பு முடித்த, 82 பேருக்கு பட்டம் வழங்கும் விழா, அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடந்தது.தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் வீரமணி, நெடுஞ்சாலை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, எம்.பி., செம்மலை, கலெக்டர் மகரபூஷணம் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவை நடத்துவதற்கு, பட்டம் பெறும் ஒவ்வொரு மாணவ மாணவியரிடமும், மருத்துவமனை நிர்வாகம் தலா, 4,000 ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, ஒரு சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், சான்றிதழ் பெற வேண்டும் என்பதற்காக, பணத்தை கொடுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குனரம், அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு, பல்வேறு கட்டப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு வழங்கி வருகிறது. அவ்வாறு இருந்தபோதும், மாணவர்களிடம் பணம் வசூலித்து பட்டமளிப்பு விழா நடத்தியது வேதனையான ஒன்று என, மாணவர்களின் பெற்றோர் குமுறுகின்றனர்.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில், ஐந்தரை ஆண்டு, எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்த மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கும் விழா, சமீபத்தில் நடந்தது. அப்போது, அமைச்சர் வருகிறார், அதிகாரிகள் வருகின்றனர் என கூறி, ஒவ்வொரு மாணவரிடத்திலும், 4,000 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்து.
மேலும், மருத்துவ அதிகாரிகள் தங்களுக்கு தாங்களே கவுரவித்துக் கொண்டனர். வேறு எந்த அரசு கல்லூரியிலும், இதுபோன்ற கொடுமை நடக்காது, என்றார்.
மருத்துவக்கல்லூரி முதல்வர் வள்ளிநாயகம் கூறுகையில், "யாரிடமும் நாங்கள் கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கவில்லை. மாணவர்களுடைய பிரதிநிதியான தினேஷ் என்பவர், தங்களுடைய டெபாசிட் பணமாக உள்ள, 5,000 ரூபாயில் இருந்து, 4,000 ரூபாயை பட்டமளிப்பு விழாவுக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் என கூறினார்.
மருத்துவக்கல்லூரி வார்டன், அந்த தொகையை வசூல் செய்து எங்களிடம் கொடுத்தார். மீதமுள்ள பணத்தை நாங்கள் போட்டு விழாவை நடத்தினோம். மருத்துவமனையில் இருக்கும் சில மாணவர்கள், வேண்டுமென்றே புரளியை கிளப்புவர், அதையெல்லாம் கேட்காதீர்கள்" என்றார்.
மாணவர்களிடம் பணம் வசூலித்தது மட்டுமல்லாமல், அதை கட்டாயப்படுத்தி வசூலிக்கவில்லை என, டீன் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது.
