தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத்திறனாளி குழந்தைகளின் சிறப்பு பயிற்சி மையங்களுக்கான அரசு நிதி திடீர் நிறுத்தம்

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் சிறப்பு பயிற்சி மையங்களுக்கான அரசு நிதி திடீர் நிறுத்தம்

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் சிறப்பு பயிற்சி மையங்களுக்கான அரசு நிதி திடீர் நிறுத்தம்


UPDATED : ஜூன் 24, 2014 12:00 AM

ADDED : ஜூன் 24, 2014 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2014 12:00 AM ADDED : ஜூன் 24, 2014 05:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: உடுமலை, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி மையங்களுக்கு அரசு வழங்கி வந்த நிதி திடீரென நிறுத்தப்பட்டதால், இம்மையங்கள் தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், இம்மையங்களை மட்டுமே நம்பி, தங்கள் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வந்த, ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் பெரிதும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர். மாற்றுத்திறன் கொண்ட தங்கள் குழந்தையை சமூகத்தில் பிற குழந்தைகளைப்போல், வளர்த்து அவர்களுக்கான வாழ்வை அவர்கள் வாழ, வழி செய்யும் வகையில் பெற்றோர் இம்மையங்களை நாடுகின்றனர்.

ஆனால், இம்மையங்களுக்கான நிதி திடீரென நிறுத்தப்பட்டதால், பெற்றோர் விரக்தி அடைந்துள்ளனர். மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அரசு வழங்கி வந்த நிதியை தொடர்ந்து வழங்க வேண்டும் என, அனைத்துத்தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சார்ந்த சிறப்பு குழந்தைகள் எனப்படும், மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் திறமைகளை முழுமையாக வெளிபடுத்தும் வகையில் ஒவ்வொரு ஒன்றியங்களிலும், பாதுகாப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு நன்றாக பயிற்சி அளித்து, பிற குழந்தைகளை போன்று அவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் இம்மையங்கள் செயல்படுகின்றன.

ஒவ்வொரு ஒன்றியத்திலும், ஆதார வள மையங்கள் அல்லது பகல் நேர பாதுகாப்பு மையங்களாக அமைந்துள்ளன. இம்மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்க சிறப்பு ஆசிரியர் ஒருவர், பாதுகாவலர், பயிற்சி அளிப்பதற்கான ஆசிரியர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் அக்குழந்தைகளுக்கு கல்வி கற்பது, பிறரிடத்து பழகுவது, தினசரி வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய பழக்க வழக்கங்கள், எழுத்துகளை உச்சரிப்பது உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கின்றனர். மேலும், வாரம் ஒருமுறை பிசியோதெரபிஸ்ட்கள் இம்மையங்களுக்கு வந்து, குழந்தைகளின் கை, கால்கள் நன்றாக செயல்படும் வண்ணம் பயிற்சி அளிக்கின்றனர்.

காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, பள்ளிக் கூடங்களை போலவே இம்மையங்களும் செயல்படுகின்றன. காலையில் சுண்டல், பயிர் வகைகள் போன்ற சிற்றுண்டிகளும், மதிய உணவும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக மத்திய அரசு மூலம் இம்மையங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி வெகுவாக குறைந்து தற்போது முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடுமலை, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் அனைத்து மையங்களிலும் இதேநிலைதான். உடுமலை, போடிபட்டி மற்றும் சோமவாரப்பட்டியில் செயல்படும் மையங்களில் இருபதிற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் முறையான பயிற்சிகளால் உடல்நலம் சீராகி பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஓராண்டாக முழுமையான அனைத்து வசதிகளுக்குமின்றி போக்குவரத்திற்கு மட்டுமே நிதி வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டில் போக்குவரத்திற்கு வழங்கப்பட்ட நிதியுதவியும் நிறுத்தப்பட்டுள்ளதால் இம்மையங்களுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை சரி பாதியாக குறைந்துள்ளது.

மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற மையங்கள் மட்டுமே ஆதரவாக இருந்தது. பிற குழந்தைகளை போல தங்களின் குழந்தைகளும் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என ஆர்வத்துடன் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் பெற்றோர் இம்மையங்களை நாடுகின்றனர். போக்குவரத்திற்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்த போதிலும், குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி சிரமத்தை பாராது பெற்றோர்கள் குழந்தைகளை மையங்களுக்கு அனுப்பினர்.

இவர்களின் எண்ணத்தை குழி தோண்டி புதைக்கும் வகையில், தற்போது இம்மையங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி ஒதுக்கீடு முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் இம்மையங்களுக்கு வரத்தான் செய்கின்றனர்.

ஒவ்வொரு மையங்களிலும் 30திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்த நிலை, தற்போது பத்திற்கும் குறைவான குழந்தைகள் மட்டுமே பயிலும் நிலை உள்ளது. விரைவில் தங்கள் குழந்தைகளும் பள்ளிக்கு செல்வர் என்ற பெற்றோர்களின் நம்பிக்கையும் உடைந்து வருகிறது. மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல், இம்மையங்களுக்கு அனுப்பவும் வழியில்லாத அவலம் உருவாகியுள்ளது.

பிற குழந்தைகளை காட்டிலும், சிறப்பு குழந்தைகளுக்கே  வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்திருக்கும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என எண்ணும் அக்குழந்தைகளின் பாதை, இதுபோன்ற நிதியுதவி இல்லாதததால் மறிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அரசு இம்மையங்களுக்கு நிதி ஒதுக்கி, இம்மையங்களை செயல்படுத்த வேண்டும் என, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us