தொந்தரவுக்கு ஆளாகும் விடுதி மாணவிகள் - காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
தொந்தரவுக்கு ஆளாகும் விடுதி மாணவிகள் - காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
UPDATED : ஆக 16, 2014 12:00 AM
ADDED : ஆக 16, 2014 11:39 AM
திருப்புவனம்: திருப்புவனம் அரசு ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி மாணவிகளை பஸ்சில், மாணவர்கள் ஈவ்டீசிங் செய்வதால், பள்ளிக்கு 3 கி.மீ., தூரம் நடந்தே செல்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மாணவியர் விடுதி பிரமனூர் செல்லும் வழியில் பர்மா காலனியில் உள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதி, ஆதி திராவிடர் நலவிடுதி இரண்டும் அடுத்தடுத்து உள்ளது. இங்கு திருப்புவனத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கியுள்ளனர். திருப்புவனத்தில் பெண்களுக்கு தனியாக பள்ளி,விடுதி இருப்பதால் பெற்றோர் ஓரளவிற்கு கல்வி கற்க அனுமதிக்கின்றனர். பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், விடுதிக்கும் 3 கி.மீ.,தூரம் உள்ளது.
விடுதியில் இருந்து தினமும் காலை 7.30 மணிக்கே கிளம்பும் மாணவிகள் , பிரமனூர், பனையனேந்தல் ஆகிய கிராமங்களில் இருந்து வரும் பஸ்களில் ஏறி பள்ளிக்கு சென்று வந்தனர். சமீப காலமாக பள்ளிக்கு பஸ்சில் செல்லும் விடுதி மாணவிகளை, ஒரு சிலர் கேலி செய்து ஈவ் டீசிங் செய்கின்றனர். இதனால் பல மாணவிகள் பஸ்சில் செல்லாமல் 3 கி.மீ., தூரமுள்ள பள்ளிக்கு நடந்தே செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் மாணவிகள் தினமும் காலை, மாலை வேளைகளில் கூட்டம் கூட்டமாக நடந்தே செல்கின்றனர்.
மாணவிகளிடம் கேட்டபோது, பஸ்சில் சிலர் தொந்தரவு செய்கின்றனர். எனவே வேறு வழியின்றி நடந்தே செல்கின்றோம். நடந்து செல்லும்போது சில நேரங்களில் லேட்டாகிவிடும். மாலை வேளையில் வந்து படிக்க முடியாது; இதனை வீட்டிலும் சொல்ல முடியாது. காலையில் கூட பரவாயில்லை.
மாலையில் மாணவர்கள் சிலர் சந்தை திடலில்தான் பஸ் ஏறுவர். வேண்டுமேன்றே நாங்கள் ஏறும் பஸ்சில்தான் ஏறுவார்கள். தட்டிக் கேட்டால் மிரட்டுகின்றனர். எங்களது பிரச்னையை தீர்க்க மகளிர் போலீசாரை நிறுத்தி கண்காணிக்க வேண்டுமென்றனர்.
பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதி வார்டன் மோகனாம்பாளிடம் கேட்டபோது, "ஹாஸ்டல் அருகே பஸ் ஸ்டாப் கிடையாது.
திருப்புவனம்புதூரில் காலை 8 மணிக்கு மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் பஸ், பெரும்பாலும் காலியாகத்தான் செல்லும். அதில் ஏறிச்செல்ல மாணவிகளிடம் வலியுறுத்தியுள்ளேன். கூட்டமாக இருக்கும் பஸ்சில் ஏறக்கூடாது என சொல்லியுள்ளேன்" என்றார்.
