தமிழகத்தில் கூடுதல் வேளாண் பல்கலைக்கழகங்கள் : டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை
தமிழகத்தில் கூடுதல் வேளாண் பல்கலைக்கழகங்கள் : டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை
UPDATED : ஆக 21, 2014 12:00 AM
ADDED : ஆக 21, 2014 11:08 AM
திருச்சி: கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களை போல, தமிழகத்திலும் கூடுதலாக வேளாண் பல்கலைக்கழகங்களை அமைக்க வேண்டும், என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச்சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
செயல்தலைவர் மகாதானபுரம் ராஜாராம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தமிழக அரசு, மிஷன்- 2023 மூலமாக உணவு உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க, நவீன தொழில் நுட்பங்களை வேளாண் துறையில் புகுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பள்ளிப் படிப்பை முடித்தவர்கள், வேளாண் படிப்பில் அதிகம் சேர ஆர்வம் காட்டுகின்றனர். அதற்காக, மாநிலத்தில் கூடுதலாக வேளாண் கல்லூரிகள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை புதிதாக துவங்க வேண்டும்.
தமிழகத்தில், வேளாண் பருவ சூழ்நிலைக்கு ஏற்ப, ஏழு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் தேவையான ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க தேவைகளை கருத்தில் கொண்டு, மகத்துவ மையம், திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட உள்ளது.
வேளாண் தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள் இன்னும் 10 ஆண்டுகளுக்கு 15 ஆயிரம் பேர் தேவைப்படுகின்றனர். எனவே, திருச்சியை மையமாக கொண்டு, வேளாண் பல்கலைக்கழகம் புதிதாக துவங்க வேண்டும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கி, ஒரு தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில், வேளாண் பல்கலைக்கழகங்கள் அதிகப்படியாக உள்ளன. தமிழகத்திலும், மிஷன் -2023 திட்டத்தை பூர்த்தி செய்ய, வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், ஆராய்ச்சி மையங்களை புதிதாக துவக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
