தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை
தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை
UPDATED : அக் 08, 2024 12:00 AM
ADDED : அக் 08, 2024 09:17 AM

திருச்செங்கோடு:
பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க, தலைமையாசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும், என ஆய்வு கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பேசினார்.
மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம், திருச்செங்கோட்டில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) விஜயன், உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்து பேசியதாவது:
பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள், இவர்களை தொடர்ந்து படிக்க வைக்க முயற்சி எடுக்க வேண்டும். வட-கிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு, தயாராக இருக்க வேண்டும். கற்றல் கற்பித்தலை மேம்படுத்துவதற்காக, ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து செயல்பட வேண்டும். பள்ளி மேலாண் தகவல் மையத்தில், இ.எம்.ஐ.எஸ்., பதிவிடுவது அவசியம். நம் பள்ளி, நம் பெருமை திட்டத்தின் கீழ், நிதி திரட்டி, அவற்றை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க, தலைமையாசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு குழு ஏற்படுத்த வேண்டும். மேலும், சாலை பாதுகாப்பு மன்றம், போதை பொருள் விழிப்புணர்வு குழு ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து, 2023-24ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத்தந்த, 49 பள்ளிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி துணை ஆய்வாளர்கள் பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.