ஐம்பத்தி ஓராயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய பிரதமர் மோடி
ஐம்பத்தி ஓராயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய பிரதமர் மோடி
UPDATED : அக் 29, 2024 12:00 AM
ADDED : அக் 29, 2024 05:38 PM

சென்னை:
ரோஜ்கார் மேளா எனப்படும் வேலை வாய்ப்புத் திருவிழாவில் 51,000 இளைஞர்களுக்கு அரசு பணி நியமன ஆணையை காணொலி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
நாடு முழுவதும் 40 இடங்களில் இந்த வேலைவாய்ப்பு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அதிகபட்ச வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். அரசின் கொள்கைகளும், முடிவுகளும் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. விரைவுச் சாலைகள், நெடுஞ்சாலைகள், சாலைகள், ரயில், துறைமுகங்கள், விமான நிலையங்கள், கண்ணாடி இழை கேபிள்கள் பதித்தல், மொபைல் கோபுரங்கள் அமைத்தல் என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புதிய தொழிற்சாலைகளின் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. குடிநீர் மற்றும் எரிவாயு குழாய்களை அமைத்தல், புதிய பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை நிறுவுதல் மற்றும் உள்கட்டமைப்புக்காக செலவிடுவதன் மூலம் போக்குவரத்து செலவுகள் குறைவதுடன் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகின்றன.
ஒரு மாபெரும் தொழிற்சாலை செயலாற்ற ஆயிரக்கணக்கான சிறிய தொழிற்சாலைகள் முக்கிய பங்காற்றுகின்றன. அதன் மூலம் இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயனடைகின்றன. புதிய தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும் பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகின்றன, என்றார்.
மேலும் ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்தையும் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்துவதன் மூலம் தற்சார்பு இந்தியா கட்டமைக்கப்படுகிறது. இதன் மூலம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் வகையில், இந்தியா முன்னோக்கி செல்கிறது, என்று கூறினார்.