ஊர்காவல்படை வீரர் தேர்வு குளறுபடி அதிகாரிகள் ஆஜராக நீதிபதி உத்தரவு
ஊர்காவல்படை வீரர் தேர்வு குளறுபடி அதிகாரிகள் ஆஜராக நீதிபதி உத்தரவு
UPDATED : ஜன 10, 2025 12:00 AM
ADDED : ஜன 10, 2025 07:13 AM
புதுச்சேரி:
ஊர்காவல்படை வீரர் தேர்வு வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் இன்று ஆஜராக வேண்டும் என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் ஊர்காவல் படை வீரர்கள் தேர்வு நடந்தது. இதில் தேர்வுப்பாடமாக கணிதம், வரலாறு, பொது அறிவியல் பாடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் வினாத்தாளில் 86 வினா முதல் 100 வது வினா வரை ஆங்கில பாடத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. இதையடுத்து தேர்வு எழுதியவர்களில் 54 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில் தேர்வு அறிவிப்பில் ஆங்கிலம் பாடம் சேர்க்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் வினா கேட்கப்பட்டுள்ளது. அதனால் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண் அளித்து தேர்வு முடிவு வெளியிட வேண்டும் என, மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, 36 பேருக்கு வேலை வழங்க வேண்டும். இதை புதுச்சேரி அரசு 10 நாட்களில் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை. இதையடுத்து கோர்ட் அவமதிப்பு வழக்காக எடுக்கப்பட்டு, மதுரை கிளைக்கு மாற்றப்பட்டது.
இதுதொடர்பான அப்போதைய மாநில நிர்வாகப் பணியாளர் சீர்திருத்த துறை செயலர், காவல்துறை தலைவர், சீனியர் எஸ்.பி., மற்றும் எஸ்.பி., ஆகியோர் நேற்று 8ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஆனந்த வெங்கடேசன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இதில் இன்று 9ம் தேதி மதியம் 2:15 மணிக்கு முதல் வழக்காக நடத்தப்படும் என, அறிவித்தார்.
இந்த வழக்கு தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் இன்று ஆஜராக வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஞானசேகரன் ஆஜராகி வாதாடினர்.