வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உரை
வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உரை
UPDATED : நவ 05, 2025 07:49 AM
ADDED : நவ 05, 2025 07:50 AM

புதுடில்லி:
மூன்று நாள் “வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு மாநாடு” புதுடில்லியில் நடைபெற்றது.
இதில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு “வளர்ச்சியடைந்த இந்தியா - பார்வை” என்ற தலைப்பில் நடைபெற்ற வட்டமேசை கலந்துரையாடலில் உரையாற்றினார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய விஞ்ஞானிகளை “இந்திய அறிவியல் குடும்பத்தின் அங்கம்” என வரவேற்ற அவர், இந்தியாவின் ஈடுபாட்டை “மூளைச் சலவை”யிலிருந்து “தலைகீழ் மூளைச் சலவை” அல்லது “மூளைப் பரிமாற்றம்” என்ற மாதிரிக்கு மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தை முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் தலைமையேற்றார். இதில் கலந்துகொண்ட விஞ்ஞானிகள் பல முக்கிய ஆலோசனைகளை முன்வைத்தனர். இந்திய மாணவர்களுக்கு ஓராண்டு வெளிநாட்டில் பணிபுரிய அனுமதி அளிக்கும் திட்டம் உருவாக்குதல், பன்னாட்டு பேச்சாளர்களுக்கான அனுமதி நடைமுறைகளை எளிதாக்குதல், முன் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பட்டியலை உருவாக்குதல், வைபவ் பெல்லோஷிப்பை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தல் போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், இந்தியாவின் தேவைகளுக்கேற்ப உள்நாட்டு தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்குதல் மற்றும் பொது, தனியார் கூட்டுறவுகள் மூலம் ஆராய்ச்சியைத் தொழில் துறையுடன் இணைத்தல் குறித்தும் பேசப்பட்டது.
இந்த ஆலோசனைகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் உள்ளிட்ட பல ஆக்கபூர்வமான யோசனைகளை அரசு பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும், சில முன்மொழிவுகள் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து விரைவில் ஆராயப்படும் என்றும் தெரிவித்தார்.

