அரசு உயர்நிலைப் பள்ளியில் தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் பெற்றோர்கள் கவலை
அரசு உயர்நிலைப் பள்ளியில் தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் பெற்றோர்கள் கவலை
UPDATED : பிப் 24, 2026 11:21 AM
ADDED : பிப் 24, 2026 11:24 AM
தொண்டி:
தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெஞ்ச், டெஸ்க் வசதி இல்லாமல் தரையில் அமர்ந்து பாடம் படிப்பதால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.
இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 350 மாணவர்கள் படிக்கின்றனர். ஆறு மணி நேரம் தொடர்ந்து தரையில் அமர்ந்து குனிந்து எழுதுவதால், சிறு வயதிலேயே மாணவர்களுக்கு முதுகு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மாணவிகள் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்.
இது குறித்து இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன் கூறியதாவது: மாணவர்களின் எதிர்காலத்திற்காக பெற்றோர்கள் படாத பாடுகிறார்கள். ஆனால் பள்ளியில் ஒரு பெஞ்ச், சேர் கூட இல்லை.
இது தொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ., கலெக்டர் என அனைவருக்கும் பல முறை நேரில் சென்று மனுக்கள் கொடுத்தும், இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இல்லம் தேடிக் கல்வி, புதுமைப் பெண் என பல திட்டங்களை அரசு அறிவித்தாலும், இருக்கும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளைச் செய்து தருவதில் மெத்தனமாகவே உள்ளது.
நம்புதாளை பள்ளி மாணவர்களின் நிலை குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். மாணவர்களின் எதிர்காலம் பெஞ்ச், டெஸ்க் வசதிகளுக்காகக் காத்திருக்கிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களின் முதுகு வலியையும், மன வலியையும் போக்க வேண்டும் என்றனர்.
