நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு மத்திய அரசே பொறுப்பு: மது பங்காரப்பா
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு மத்திய அரசே பொறுப்பு: மது பங்காரப்பா
UPDATED : மே 13, 2026 03:27 PM
ADDED : மே 13, 2026 03:28 PM
பெங்களூரு:
“நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு மத்திய அரசே பொறுப்பு,” என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறி உள்ளார்.
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நாடு முழுதும் கடந்த 3ம் தேதி நடந்தது. 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இத்தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதால், கடந்த 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து, மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா அளித்த பேட்டி:
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது. நீட் தேர்வை மாநில அரசா நடத்துகிறது; மத்திய அரசு தானே நடத்துகிறது. தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு மத்திய அரசே முழு பொறுப்பு. இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய பதில் அளிக்க வேண்டும்.
லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஏழை மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்து தேர்வை எழுதினர். எப்படியாவது அரசு கல்லுாரிகளில் 'சீட்' கிடைக்கும் என எதிர்ப்பார்த்தனர்.
ஆனால், மத்திய அரசு அலட்சியமாக செயல்பட்டு உள்ளது. இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் அசோக் என்ன பேசுவார் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் ஆட்சியிலும் வினாத்தாள் கசிவு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவில் யாரோ ஒருவர் தவறு செய்து உள்ளார். இதற்கு மத்திய அரசை குறைகூறுவது தவறு. இது போன்ற வினாத்தாள் கசிவு சம்பவங்கள் காங்கிரஸ் ஆட்சியிலும் பல முறை நடந்துள்ளன. கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக பொது சேவை ஆணையத்தில், ஏராளமான குளறுபடிகள் நடக்கின்றன. இதை மாநில அரசால் சரிசெய்ய முடியவில்லை. கே.பி.எஸ்.சி., அமைப்பை சீர்குலைக்கும் முயற்சியில் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.
- குமாரசாமி, மத்திய அமைச்சர்.
