தனியார் பள்ளியில் இட ஒதுக்கீடு சேர்க்கை அதிக விண்ணப்பத்தால் குலுக்கலில் தேர்வு
தனியார் பள்ளியில் இட ஒதுக்கீடு சேர்க்கை அதிக விண்ணப்பத்தால் குலுக்கலில் தேர்வு
UPDATED : மே 23, 2026 03:28 PM
ADDED : மே 23, 2026 03:29 PM
ஈரோடு:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 2026 - 27ம் கல்வி ஆண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்த பட்சம், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
எல்.கே.ஜி., மற்றும் 1ம் வகுப்பு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு இணைய தளம் மூலம் கடந்த மாதம், 20 முதல் விண்ணப்பித்திருந்தனர். ஈரோடு மாவட்ட அளவில், 77 நர்சரி, பிரைமரி பள்ளிகளில், 673 இடங்கள், 3 நடுநிலை பள்ளிகளில், 30 இடங்கள், 26 உயர்நிலை பள்ளிகளில், 404 இடங்கள், 76 மேல்நிலைப் பள்ளிகளில், 1,195 இடங்கள் என, 182 பள்ளிகளில், 2,302 இடங்கள் உள்ளன. கடந்த, 15 வரை, 1,951 பேர் விண்ணப்பித்து, 1,888 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டன. மீதி, 63 இடங்களுக்கு கடந்த, 18 வரை விண்ணப்பித்தனர்.
இம்மாணவர்களுக்கான சேர்க்கை அந்தந்த பள்ளிகளில் நேற்று நடந்தது. பெரும்பாலான பள்ளிகளில், இடங்களை விட கூடுதல் விண்ணப்பம் வந்ததால், மாணவர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்து சேர்க்கை நடந்தது. அனைத்து இடங்களும் நேற்று நிரப்பப்பட்டதாக, கல்வித் துறையினர் தெரிவித்தனர்.
