குடிசைவாசிகளுக்கு ஒதுக்கிய மாற்று இடத்தில் பள்ளிகள்; பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
குடிசைவாசிகளுக்கு ஒதுக்கிய மாற்று இடத்தில் பள்ளிகள்; பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
UPDATED : மே 30, 2026 10:17 AM
ADDED : மே 30, 2026 10:18 AM
புதுடில்லி:
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க் அருகே, மூன்று குடிசைப் பகுதிகளில் வசிப்போருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகேயுள்ள பள்ளிகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லோக் கல்யாண் மார்க்கில், பாய்ராம் கேம்ப், டி.ஐ.டி., கேம்ப் மற்றும் மஸ்ஜித் கேம்ப் ஆகிய மூன்று குடிசைப் பகுதிகளில், 717 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தக் குடிசைகளை அப்புறப்படுத்தவும், அங்கு வசிப்போருக்கு திக்ரி எல்லை அருகே மாற்று இடம் வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்தது.
அரசின் இந்த முடிவை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் குடிசைவாசிகள் தாக்கல் செய்த மனுவில், 'மாற்று இடமாக, திக்ரி எல்லை அருகே அரசு தேர்வு செய்துள்ள வீட்டுவசதி வாரிய இடத்தில் பள்ளிகள், மின்சார வசதி இல்லை. சுகாதார வசதிகளும் செய்யப்படவில்லை' என கூறியிருந்தனர்.
இம்மாத தொடக்கத்தில், இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மூன்று குடிசைப் பகுதிகளில் இன்னும் வீடுகளைக் காலி செய்யாதோருக்கு எதிராக கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டாம் என, உத்தரவிட்டு இருந்தது. குடிசைவாசிகள் சார்பில் தாக்கல் செய்த வழக்க, தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேதன் சர்மா ஆஜராகி கூறியதாவது:
லோக் கல்யாண் மார்க் குடிசைவாசிகள், திக்ரி எல்லை அருகே, தங்கள் வீடுகளுக்கு டில்லி அரசு போக்குவரத்து கழக பஸ்களில் இலவசமாக சென்று வர ஓராண்டுக்காக பயண அட்டை வழங்கப்படும். ஆண்டுதோறும் அதை நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது. அதே போல, மெட்ரோ ரயிலிலும் இலவச பயணத்துக்கான ஏற்பாட்டை செய்ய முடியும்.
அரசு வழங்கிய மாற்று இடத்துக்கு, ஏற்கனவே 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிபெயர்ந்துவிட்டனர். நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோர் மட்டும், திக்ரி எல்லையில் தங்களுக்கு ஒதுக்கிய வீட்டை பெற்றுக் கொள்ளவில்லை. திக்ரி எல்லையில் பல பள்ளிகள் உள்ளன. இவ்வாறு அவர் வாதிட்டார்.
குடிசைவாசிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'லோக் கல்யாண் மார்க் குடிசைவாசிகளுக்கு, 5 கி.மீ., தூரத்துக்குள் மாற்று இடம் வழங்க வேண்டும்' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
திக்ரி எல்லை அருகே சவ்தா கேவ்ரா பகுதியில் உள்ள பள்ளிகள் குறித்து, மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். அதே போல, குடிசைவாசிகள் இலவசமாக டில்லியில் இருந்து திக்ரி எல்லை குடியிருப்புக்கு சென்று வர, டில்லி அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவற்றுடன் மத்திய அரசு செய்துள்ள ஒப்ந்தம் குறித்தும் தெளிவான பதிலை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
