மாணவர்களே இல்லாத அரசுப் பள்ளி; பணியில் ஒரே ஒரு தலைமை ஆசிரியர்
மாணவர்களே இல்லாத அரசுப் பள்ளி; பணியில் ஒரே ஒரு தலைமை ஆசிரியர்
UPDATED : ஜூன் 16, 2026 10:18 PM
ADDED : ஜூன் 16, 2026 10:18 PM
திருவாடானை:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆதியாகுடி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களே படிக்காத நிலையில் தலைமை ஆசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார்.
ஆதியாகுடி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சில ஆண்டுகளாக மாணவர்களின் சேர்க்கை மிக குறைவாக இருந்தது. கடந்த கல்வி ஆண்டில் 2 மாணவர்கள், 2 மாணவிகள் என 4 மாணவர்கள் படித்து வந்தனர். நடப்பு கல்வியாண்டு துவங்கியதும் 2 மாணவர்கள் ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு சென்றுவிட்டனர்.
மீதமுள்ள 2 மாணவிகள் மூன்றாம் வகுப்பு படித்தனர். இவர்களும் அருகில் உள்ள புளியால் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்துவிட்டனர். இதனால் ஆதியாகுடி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களே இல்லை என்ற நிலையில் ஒரு தலைமை ஆசிரியர் மட்டும் பணியில் உள்ளார். இவரே தினமும் பள்ளியை திறந்து பூட்டிவிட்டு செல்லும் அவல நிலை தொடர்கிறது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மாணவர்கள் இல்லாததால் ஆதியாகுடி பள்ளியை மூடும் நிலை உள்ளது. கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து சுற்று கிராமங்களில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டும்' என்றனர்.
