தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வித்யாரம்பம் விழாவில் மஞ்சள் அரிசியில் எழுதி கல்வி கற்க துவங்கிய மழலைகள்

வித்யாரம்பம் விழாவில் மஞ்சள் அரிசியில் எழுதி கல்வி கற்க துவங்கிய மழலைகள்

வித்யாரம்பம் விழாவில் மஞ்சள் அரிசியில் எழுதி கல்வி கற்க துவங்கிய மழலைகள்


UPDATED : அக் 21, 2026 04:42 PM

ADDED : அக் 21, 2026 04:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 04:42 PM ADDED : அக் 21, 2026 04:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தல் துவங்கும் அடையாளமாக வித்யாரம்பம் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகள், கோயில்களில் நடந்தது. புதிய மாணவர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கன்வாடிகள், தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடந்தது. அச்யுதா பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளிலும் கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர், கணபதி, சரஸ்வதி தேவிக்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தினர்.

இரண்டு வயதுக்கு மேற்பட்ட, முதன்முதலாகப் பள்ளியில் சேர வரும் மழலைச் செல்வங்களை ஆசிரியர்கள் வரவேற்று, தட்டில் பரப்பப்பட்ட நெல்மணிகள், மஞ்சள் கலந்த பச்சரிசியின் மேல் அவர்களின் கைகளைப் பிடித்து ‛அ' எழுத வைத்தனர். விஜயதசமி நாளில் பள்ளியில் குழந்தைகளைச் சேர்த்தால் அவர்கள் கல்வியில் மிகச் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., ஆரம்ப வகுப்புகளுக்கான சேர்க்கை அதிகளவில் நடந்தது.

புதிய மாணவர்களுக்கு இனிப்புகளும், பரிசுகளும் வழங்கிப் பள்ளி ஆசிரியர்கள் மழலையர்களையும், அவர்கள் தம் பெற்றோர்களையும் வரவேற்றனர்.கோயில்களில் அன்னை சரஸ்வதியின் சன்னதிக்கு முன்பாக, பெற்றோர் தங்களது குழந்தைகளை மடியில் அமரவைத்து வித்யாரம்பம் எனும் ஏடு துவங்குதல் நிகழ்வில் பங்கேற்றனர்.

பெரிய தட்டில் பரப்பி வைக்கப்பட்டுள்ள மஞ்சள் கலந்த பச்சரிசி, நெல்மணிகளில், குழந்தையின் கைவிரலைப் பிடித்து 'அ', ‛ஓம்' என எழுதச் செய்து கல்வியைத் துவக்கி வைத்தனர். சில கோயில்களில் பூசாரிகள், குருக்கள் குழந்தையின் நாக்கில் தங்க ஊசி, தர்பை புல்லால் மந்திர எழுத்துக்களை எழுதி வித்யாரம்பம் நடத்தினர்.

சாணார்பட்டி:


சிலுவத்துார் ஸ்ரீ சேஷாத்திரி மகரிஷி வித்யாலயா நர்சரி பிரைமரி பள்ளியில் விஜயதசமி, வித்யாரம்பம் நிகழ்ச்சி மங்கள இசை முழங்க நடந்தது. புதிதாகப் பள்ளியில் சேர்ந்த 20 சிறுவர்கள் பங்கேற்றனர்.

அவர்கள் மஞ்சள் அரிசியில் தங்களது பிஞ்சுக் கரங்களால் 'அம்மா' என்ற தமிழ் எழுத்தையும், ஆங்கிலத்தில் மூன்று எழுத்துக்களையும், ஹிந்தியில் மூன்று எழுத்துக்களையும், 1, 2, 3 ஆகிய எண்களையும் எழுதி கல்வி கற்றல் பயணத்தைத் தொடங்கினர்.

மேலும் இளைய பாலர் வகுப்பில் பயிலும் 42 மாணவர்கள், பெற்றோர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, குழந்தைகளுடன் இணைந்து மஞ்சள் அரிசியில் எழுதி மகிழ்ந்தனர். பெற்றோர்கள் குழந்தைகளை வாழ்த்திப் பேசினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. புதிய சிலேடுகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் சந்திரமோகன் தலைமையில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சின்னாளபட்டி:


சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விஜயதசமி விழாவில் தாளாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். முதல்வர் திலகம் முன்னிலை வகித்தார். மாணவர் சேர்க்கைக்கான வித்யாரம்பம் நடந்தது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடந்தது.

புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு, முதல்வர் திலகம் மஞ்சள் கலந்த பச்சரிசியில் அகர எழுத்து எழுத கற்றுக் கொடுத்தார். அறங்காவலர்கள் ஆல்பிரட் யங், பாரதிராஜா, அபிஷேக் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் வெண்ணிலா வரவேற்றார்.

சித்தையன்கோட்டை:


சித்தையன்கோட்டை சேரன் குளோபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், முதல்வர் மகாலட்சுமி புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு நெல் மணிகளில் அகர எழுத்துக்கள் மூலம் வித்யாரம்பம் துவக்கி வைத்தார். செம்பட்டி, சித்தையன்கோட்டை, ஆத்துார், சித்தரேவு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெற்றோர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை பள்ளி தலைமை அலுவலர் ராதாகிருஷ்ணன், நிர்வாக அறங்காவலர் மீனாட்சிசுந்தரம், அறங்காவலர்கள் சிவக்குமார், செல்வக்குமார், ஷோபா, ராஜா செய்திருந்தனர். தாளாளர் திலகம், தலைமை நிர்வாகி அபிஷேக்சிவக்குமார், நிர்வாகி அஸ்விதா அபிஷேக் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் சரண்யா நன்றி தெரிவித்தார்.

கன்னிவாடி:


தருமத்துப்பட்டி டி.எம்.பி., நர்சரி துவக்கப் பள்ளியில், வித்யாரம்பம் நடந்தது. பள்ளி தாளாளர் சுப்ரமணி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் செல்வி முன்னிலை வகித்தார். சிறப்பு பூஜைகளுக்கு பின் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் மஞ்சள் கலந்த அரிசியில் தமிழ் எழுத்துக்கள் எழுத, கற்றுக் கொடுத்தனர். ஆசிரியர்கள் பிரியா, ஜோஸ்பினா, சுதிமேரி, தேன்மொழி, சூரியகிருபா உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us