ஆசிரியர் பதிவு மூப்பு பட்டியல்: ‘சிடி’யில் பதிவு செய்ய பரிந்துரை
ஆசிரியர் பதிவு மூப்பு பட்டியல்: ‘சிடி’யில் பதிவு செய்ய பரிந்துரை
UPDATED : அக் 03, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பட்டியல் உள்ளிட்ட தகவல்களை ‘சிடி’யில் பதிவு செய்து தருவதற்கு, வேலை வாய்ப்பு இயக்குனரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணிகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடந்து வருகின்றன. பள்ளிகளைப் பொறுத்தவரை, முழுக்க முழுக்க வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம் பட்டியலை பெற்று, அதில் தகுதி வாய்ந்த முதலாவது நபருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. பதிவு மூப்பு பட்டியல் உள்ளிட்ட ஆவணங்கள் முழுவதையும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் தயார் செய்து, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்புகிறது.
ஆவணங்கள் அனைத்தும் அப்படியே கட்டு, கட்டாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எடுத்து வரப்படுகின்றன. இப்படி எடுத்து வரும் போது, வழியிலோ அல்லது தேர்வு வாரிய அலுவலகத்திலோ தவறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
மேலும், ஆவணங்களை பக்கம், பக்கமாக ஆய்வு செய்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கருதுகிறது. பட்டியல்களை சரிபார்த்த பிறகு அவற்றை பாதுகாப்பாக எடுத்து வைப்பதற்கும் போதிய இட வசதி இல்லாத நிலை இருக்கிறது.
எனவே, இனி பதிவு மூப்பு பட்டியல்களை ஆவணங்களாக அனுப்பாமல் அந்த தகவல்களை, ‘சிடி’யில் பதிவு செய்து அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
