கல்லூரி வளாகத்தில் முதல்வர் பேனர்: உடனே அகற்ற மாணவியர் கோரிக்கை
கல்லூரி வளாகத்தில் முதல்வர் பேனர்: உடனே அகற்ற மாணவியர் கோரிக்கை
UPDATED : மார் 27, 2013 12:00 AM
ADDED : மார் 27, 2013 08:22 AM
சென்னை: ராணி மேரி கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ள, முதல்வர் ஜெயலலிதாவின் பேனரை உடனே அகற்ற, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடற்கரை சாலையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரி வளாகத்தில், முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில், அ.தி.மு.க.,வினர் சார்பில், இரண்டு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில், அவ்வையார் சிலை எதிரில் உள்ள பேனர், அதிக சாரங்களை கொண்டு, பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேனர் அவ்வழியே செல்வோரின் கவனத்தை அதிகம் ஈர்ப்பதாக உள்ளது. கல்வி போதிக்கும் இடமாக உள்ள கல்லூரியில், அரசியல் கட்சியின் குறிப்பாக, ஆளும் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர், அக்கல்லூரியில் படிக்கும் மாணவியர் மட்டுமின்றி, கடற்கரையில் நடைபயணம் மேற்கொள்ளும், பொதுமக்கள் மத்தியிலும், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, அக்கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் கூறியதாவது: கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, எங்கள் கல்லூரியில் கட்டப்பட்ட வளாகத்திற்கு, கலைஞர் மாளிகை என, பெயர் வைக்கப்பட்டது. இதில், அரசியல் உள்ளதாக கூறி, கலை மாளிகை என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது, ஆளுங்கட்சி சார்பில், முதல்வருக்கு எந்த விழா எடுத்தாலும், கல்லூரி வளாகத்தில் பேனர் வைப்பது, வாடிக்கையாக உள்ளது. ஏற்கனவே உள்ள பேனர்கள் அகற்றப்படுவதுடன், இனி, எந்த பேனரும், வளாகத்தில் வைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
