பணி நீடிப்பு ஆணை வழங்குவதில் தாமதம்: கவுரவ விரிவுரையாளர்கள் கலக்கம்
பணி நீடிப்பு ஆணை வழங்குவதில் தாமதம்: கவுரவ விரிவுரையாளர்கள் கலக்கம்
UPDATED : ஆக 01, 2013 12:00 AM
ADDED : ஆக 01, 2013 08:27 AM
மாலை வகுப்புகளை தமிழகத்தில், 62 அரசு கல்லூரிகளில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க, மாலை வகுப்புகளை, 2006ல், அரசு அறிமுகப்படுத்தியது. இதற்காக, 6,000 ரூபாய் தொகுப்பூதியத்தில், 1,661 கவுரவ விரிவுரையாளர்களை அரசு நியமித்தது.
இவர்களின் பணிக் காலம், ஜூன் மாதம் முதல், ஏப்ரல் மாதம் வரை. இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், பணி நீடிப்பு ஆணையை அரசு வழங்கி வந்தது. இதையடுத்து, கவுரவ விரிவுரையாளர்கள், "பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதன் விளைவால், 6,000 ரூபாய் ஊதியத்தை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, அரசு வழங்கியது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை முடிந்து, கல்லூரிகளும் துவங்கி விட்டன. ஆனால், கவுரவ விரிவுரையாளர்களுக்கான பணி நீடிப்பு ஆணை வழங்கவில்லை. கல்லூரி கல்வி இயக்குனரகத்திடம் முறையிட்டும் பலன் இல்லை.
இதுகுறித்து, தமிழக அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் சங்கத்தினர் கூறியதாவது: கவுரவ விரிவுரையாளர் பணி நீடிப்பு ஆணை, ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதத்தில் வழங்கப்படும். ஆனால், கல்லூரி துவங்கி, இரண்டு மாதங்களாகியும், இதுவரை பணி நீடிப்பு ஆணை வழங்கவில்லை.
இதுகுறித்து, பலமுறை முறையிட்டும், நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. பல கல்லூரி நிர்வாகங்கள், பணி நீடிப்பு ஆணை பெற்ற பின், கல்லூரிகளுக்கு வந்தால் போதும் என, தெரிவிக்கின்றன.
இந்த நிரந்தரமற்ற வேலையை எண்ணி, கவுரவ விரிவுரையாளர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, பணி நீடிப்பு ஆணையை உடனே வழங்கி, தமிழகத்தில் உள்ள, 62 அரசு கலை கல்லூரிகளில் பணியாற்றி வரும், கவுரவ விரிவுரையாளர்களின் நலனை காக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.