நூற்றாண்டு விழா காணும் அரசுப் பள்ளி: அடிப்படை வசதியின்றி அவதி
நூற்றாண்டு விழா காணும் அரசுப் பள்ளி: அடிப்படை வசதியின்றி அவதி
UPDATED : செப் 20, 2013 12:00 AM
ADDED : செப் 20, 2013 08:48 AM
திருவாரூர்: நூற்றாண்டு விழா காணும், திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இந்தாண்டு நூற்றாண்டு விழா காணும் இப்பள்ளியில், 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்கள், வகுப்பறைகள் இல்லாமலும், அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாமலும், மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் மிகவும் பழமை வாய்ந்த கட்டடம், இடியும் நிலையில் உள்ளது. அந்த இடத்தில் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், கால்நடைகள் அடையும் கூடாரமாகவும், இரவு நேரங்களில் திறந்தவெளி மதுக் கூடமாகவும், சமூக விரோத செயல்களின் இருப்பிடமாகவும் திகழ்கிறது. மாணவர்களின் பிரச்னைகளைப் போக்க, கல்வித்துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
