டி.டி., மருத்துவ கல்லூரியை ஏற்று நடத்த முடியாது: அரசு கைவிரிப்பு
டி.டி., மருத்துவ கல்லூரியை ஏற்று நடத்த முடியாது: அரசு கைவிரிப்பு
UPDATED : செப் 21, 2013 12:00 AM
ADDED : செப் 21, 2013 09:50 AM
சென்னை: "டி.டி., மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்று நடத்த வாய்ப்பில்லை. எம்.பி.பி.எஸ்., தவிர்த்து, மாற்று படிப்புகளில் சேர விரும்பினால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவோம்" என, மாணவியருடன் நடத்திய பேச்சில், அரசு தெரிவித்துள்ளது. நிச்சயம் தீர்வு கிடைக்கும் எனச் சென்ற மாணவியர், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மருத்துவ கவுன்சில் அனுமதி
திருவள்ளூர், டி.டி., மருத்துவக் கல்லூரியில், 2010 - 11ல் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதையும் மீறி, மாணவர்கள் சேர்க்கை நடந்தது.
இதனிடையே, "டி.டி., மருத்துவக் கல்லூரி, எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை" என, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை அறிவித்தது; கல்லூரியும் இழுத்து மூடப்பட்டது. இதனால், பணத்தைக் கொட்டி, எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த மாணவ, மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற பயத்தில், எம்.பி.பி.எஸ்.,சில் சேர்ந்த, 72 மாணவ, மாணவியர், மருத்துவக் கல்வி தொடர அரசு வழி வகை செய்ய வேண்டும் எனக் கோரி, பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
சென்னை, கிண்டி, எம்.ஜி.ஆர்., பல்கலையில், நேற்று, 31வது நாளாக தொடர் உண்ணாவிரதம் நடந்தது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், மாணவர், பெற்றோர், அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்ற பேச்சு, நேற்று, கோட்டையில் நடந்தது. உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், சுகாதார அமைச்சர் வீரமணி, துறைச் செயலர்கள், பல்கலைகளின் துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.
மூன்று மணி நேர பேச்சுக்குப் பின் வெளியே வந்த அமைச்சர் பழனியப்பன் கூறுகையில், "பெற்றோர், மாணவர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். இதுகுறித்து, முதல்வரிடம் பேசி முடிவெடுக்க முடியும்," என்று மட்டும் கூறினார். மாணவியரும், பெற்றோரும் அழுதபடி வெளியே வந்தனர்.
பெற்றோர் தரப்பில் பங்கேற்ற பூங்கொடி கூறுகையில், "அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால், எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு விடியல் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் வந்தோம். எம்.பி.பி.எஸ்., படிக்க முடியாது; வேறு ஏதாவது படியுங்கள் எனக் கூறுகின்றனர்," என்றபடி, அதற்கு மேல் பேச முடியாமல் அழுதார்.
மாணவி பிரியங்கா கூறுகையில், "எங்களின் மருத்துவக் கல்வியைத் தொடர வழி வகை செய்ய வேண்டும்; டி.டி., மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என, கோரிக்கை வைத்தோம். டி.டி., மருத்துவக் கல்லூரி நிர்வாகம், போலி ஆவணங்கள் மூலம் அதிக அளவில் கடன்களை வாங்கியுள்ளது. அந்தக் கல்லூரியை அரசால் ஏற்று நடத்த முடியாது என, அமைச்சர்கள் கூறினர்," என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "எம்.பி.பி.எஸ்., படிக்க, இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி பெற வேண்டும்; அனுமதி கிடைப்பது சாத்தியமில்லை என்பதால், பயோ டெக்னாலஜி, பி.பார்ம், பி.எஸ்சி., போன்ற மாற்று கல்வி பயிலுங்கள்; அதற்கான எல்லா ஏற்பாடுகளை செய்கிறோம் என்றனர். நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை," என்றனர்.
மாணவி தரணி கூறியதாவது
நாங்கள் எம்.பி.பி.எஸ்., தான் படிக்க வேண்டும். இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு, எங்களுடன் இணைந்து அரசு பரிந்துரைக்க வேண்டும் என, கேட்டோம். முதல்வரிடம் பேசிய பின் சொல்கிறோம்; போராட்டத்தைக் கைவிடுங்கள் என, அமைச்சர், அதிகாரிகள் கூறினர்.
உறுதியான முடிவு கிடைக்காத நிலையில், போராட்டத்தைக் கைவிட வாய்ப்பில்லை. அடுத்த கட்டமாக என்ன செய்வது என, கலந்து பேசி முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
