திண்டுக்கல் சிறுவனுக்கு வீர தீர செயல் விருது; பிரதமர் வழங்குகிறார்
திண்டுக்கல் சிறுவனுக்கு வீர தீர செயல் விருது; பிரதமர் வழங்குகிறார்
UPDATED : டிச 23, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
திண்டுக்கல்: ரயில் விபத்தை தடுத்த திண்டுக்கல் சிறுவன் மருதுபாண்டியனுக்கு, வீரதீர செயலுக்கான விருது வழங்கப்படுகிறது.டில்லி குடியரசு தினவிழாவில் பிரதமர் மன்மோகன்சிங் இந்த விருதை வழங்குகிறார்.
திண்டுக்கல் தோமையார்புரம் அருகே, கடந்த ஜூன் 26 ல் காலை 8 மணிக்கு மதுரை- சென்னைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. அப்போது இதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மருதுபாண்டியன் (13) தனது தங்கைக்கு ரயிலை காண்பிக்க அங்கு நின்றுள்ளார். அந்த வழியாக சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி பெட்டி கடந்து சென்ற போது தண்டவாளம் உடைந்ததை கண்டார். உடனடியாக தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். பின்பு சிறுநாயக்கன்பட்டி ரயில்வே கேட் கீப்பரிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதற்குள் திண்டுக்கல்லில் இருந்து மதுரை சென்ற பாசஞ்சர் வந்துள்ளது. இதை பார்த்த மருதுபாண்டியன், தனது சிவப்பு சட்டையை கழற்றி ரயில் முன் ஓடி, ரயிலை நிறுத்தினார். பின்னர் பாசஞ்சர் ரயில் டிரைவர் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து நெல்லை- மயிலாடுதுறை பாசஞ்சரும், நாகர்கோவில் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலும் கொடைரோட்டில் நிறுத்தப்பட்டன.
பெரிய விபத்தை தடுத்த மருதுபாண்டியன், திண்டுக்கல் புனித சவேரியார் நடுநிலைப்பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார். அவரை பாராட்டி, அப்போது ரயில்வே நிர்வாகம் பரிசு வழங்கியது. தற்போது இந்த மாணவரின் வீர தீர செயலை பாராட்டி டில்லியில் நடக்கும் குடியரசு தினவிழாவில் பிரதமர் மன்மோகன்சிங் விருது வழங்கி கவுரவிக்கிறார். வரும் ஜனவரி 16 அன்றே மாணவர் டில்லிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
