சிதிலமடைந்த கட்டடத்தில் அங்கன்வாடி மையம் - ஆபத்தில் குழந்தைகள்!
சிதிலமடைந்த கட்டடத்தில் அங்கன்வாடி மையம் - ஆபத்தில் குழந்தைகள்!
UPDATED : ஆக 07, 2014 12:00 AM
ADDED : ஆக 07, 2014 01:17 PM
ஸ்ரீபெரும்புதுார்: சிதிலமடைந்த கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்குவதாலும், திறந்தவெளி கிணறு, அருகே இருப்பதாலும், குழந்தைகளின் பெற்றோர் பீதியடைந்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, சோகண்டி ஊராட்சியில், நந்திமேடு அமைந்துள்ளது. இப்பகுதியில், அங்கன்வாடி குறுமையம், ஆரம்பத்தில் தனியார் கட்டடத்தில் துவக்கப்பட்டது.
ரூ.5 லட்சம் செலவில்...
தற்போது, அங்கன்வாடி குறுமையம், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் சிதிலமடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது. 15 குழந்தைகள் உள்ளனர். அங்கன்வாடி பணியாளர் மட்டும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2013 - 2014ம் நிதியாண்டில், சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய் செலவில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி கட்டடத்திற்கு அருகில், அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது.
பணிகள் முடிந்து, ஓராண்டு ஆகியும், புதிய கட்டடம் திறக்கப்படவில்லை. இதனால், அங்கன்வாடி மைய குழந்தைகள், சிதிலமடைந்த கட்டடத்தில், விபத்தை எதிர்நோக்கி உள்ளனர்.
கூடுவாஞ்சேரி பேரூராட்சியில், (17வது வார்டு) அம்பேத்கர் தெருவில், அங்கான்வடி மையம் உள்ளது. இம்மையம் சில ஆண்டுகளாக சிதிலமடைந்திருந்தது. இதையடுத்து, செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி, 4.50 லட்ச ரூபாயும், பேரூராட்சி பொது நிதி 90 ஆயிரம் ரூபாய் என 5.40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
கிணறு ஆபத்து: இதையடுத்து, கடந்த 2ம் தேதி, கட்டடம் திறப்பு விழா நடந்தது. அதைத் தொடர்ந்து, குழந்தைகள் தினமும் வந்து செல்கின்றனர். இம்மையம் அருகில் ஆபத்தான குடிநீர் கிணறு மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதன் அருகில், குழந்தைகள் விளையாடுகின்றனர்.
கிணற்றில் தவறி விழும் வாய்ப்பு உள்ளது. எனவே, கிணற்றின் மேல் பகுதியில் மூடி அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
