தமிழ் வளர்ந்துகொண்டுதான் உள்ளது; தேயவில்லை: தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி
தமிழ் வளர்ந்துகொண்டுதான் உள்ளது; தேயவில்லை: தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி
UPDATED : டிச 14, 2014 12:00 AM
ADDED : டிச 14, 2014 12:13 PM
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில், விருதுகள் வழங்கும் விழாவில், முனைவர் மருதநாயகம் எழுதிய, மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம் நூலின் முதல் பிரதியை, தினமலர் ஆசிரியர் முனைவர் இரா. கிருஷ்ணமூர்த்தி வெளியிட, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் பெற்றுக் கொண்டார்.
நூலை வெளியிட்டு, தினமலர் ஆசிரியர் முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: இந்த நிகழ்ச்சியில் மாணவர்களைவிட, மாணவியர் கூட்டம் பெருந்திரளாக உள்ளது. மாணவர்கள் போட்டியிட முயற்சி செய்யாவிட்டால், அனைத்து பதவிகளையும் பெண்கள் பிடித்து விடுவர். தமிழகத்தில் அமைதியான பெண் புரட்சி ஏற்பட்டுவருகிறது. நாணயவியல் ஆய்வுக்காக, சென்னை அருட்காட்சியம் செல்வேன்; உடனடியாக உள்ளே செல்ல முடியாது.
ஆனால், அயல் நாட்டினர் வந்தால் உடனடியாக அவர்களை அனுமதிப்பர்; இதுதான் நமது கலாசாரம். கொங்கு நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கும், காந்தியத்தை பரப்பவும், அருட்செல்வர் மகாலிங்கம் பாடுபட்டார். முப்பது ஆண்டுக்குமேல் அவரை நன்கு அறிவேன். அவரைப்போல்,தமிழை வளர்க்கும் ஈடுபாடு பழனிசாமிக்கு வந்துள்ளது, பாராட்டுக்குரியது. தமிழ் படிக்கும் மக்கள் குறைகின்றனர் என்பதை நான் ஏற்க மாட்டேன். தமிழ் பேசும் மக்கள் இரு மடங்கு கூடியுள்ளனர்.
சென்ற நூற்றாண்டில்தான் மருந்துகள் வந்தது; அதற்குமுன் பிளேக், காலரா, டைபாய்டு நோய்களால் மக்கள் மடிந்தனர். மேல்நாட்டிலிருந்து மருந்துகள் வந்தபின்தான் மக்கள் தொகை அதிகரித்தது. மருந்துகளை கண்டுபிடித்த ஆங்கிலேயர்களையும், ஆங்கில மொழியையும் குறைகூற முடியாது. நான் தமிழ் பற்றுடையவன். அதேசமயம், ஆங்கிலம் இல்லாவிட்டால் பின்தங்கி விடுவோம்.
சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில், தமிழில் புதுப் புத்தகங்கள் குவிகின்றன. நாவல்கள், கட்டுரைகள் என, ஆச்சரியமூட்டும் வகையில் இடம்பெறும். தமிழ் வளர்ந்துகொண்டுதான் உள்ளது; தேயவில்லை.
கடந்த 30 ஆண்டுகளாக தொல்லியல் ஆய்வு செய்துவருகிறேன். சங்ககால நாணயங்கள் கண்டுபிடித்துள்ளதை, நான் பெருமைக்காக கூறவில்லை. கொங்கு நாட்டில் கி.மு., 3ம் நூற்றாண்டில் கிரேக்கர்கள் வந்தனர். அதற்குபின் ரோமானியர்கள் வணிகம் செய்ய வந்தனர். ரோமானியரின் உள்நாட்டு போர் காரணமாக அவர்களது வருகை குறைந்தது. அயல் நாட்டினருக்கும், தமிழ் மொழிக்கும் இடையே எப்பொழுது தொடர்பு ஏற்பட்டது என கூறமுடியவில்லை. இவ்வாறு இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
