அடிப்படை வசதிகள் இல்லாததால் தாமாகவே மூட முன்வந்துள்ள பள்ளி நிர்வாகங்கள்
அடிப்படை வசதிகள் இல்லாததால் தாமாகவே மூட முன்வந்துள்ள பள்ளி நிர்வாகங்கள்
UPDATED : பிப் 04, 2015 12:00 AM
ADDED : பிப் 04, 2015 11:25 AM
கோவை: கோவை மாவட்டத்தில், அடிப்படை வசதிகள் இல்லாததால், அங்கீகாரம் பெற முடியாமல், நான்கு பள்ளிகள் தானாக முன்வந்து பள்ளிகளை மூடுவதாக அறிவித்துள்ளன.
மாநிலம் முழுவதும், அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூடுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில், 600 பள்ளிகள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. கோவை மாவட்டத்தில், 309 பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பான நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
பதிலளிக்காத 119 பள்ளிகளுக்கு இறுதிகட்ட நோட்டீஸ், கடந்த வாரம் அனுப்பப்பட்டுள்ளது. பதிலளித்துள்ள மீதி பள்ளிகளில், முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தலைமையிலான குழு ஆய்வுபணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த இயலாத நிலையில், கோவையில் நான்கு பள்ளிகள், தானாக முன்வந்து பள்ளிகளை மூடுவதாக தற்போது, அறிவித்துள்ளன.
தொடக்க கல்வி அதிகாரி காந்திமதி கூறுகையில், "நான்கு பள்ளிகள் தானாக முன்வந்து மூடுவதாக அறிவித்துள்ளன. சுற்றுச்சுவர், வகுப்பறை பற்றாக்குறை போன்ற சிறுசிறு குறைபாடுகள் உள்ள பள்ளிகளுக்கு, அதனை சரிசெய்ய கால அவகாசம் வழங்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வு முடிவுகளில், பள்ளிகளுக்கு வழங்குவது சார்ந்த பரிந்துரை, முதன்மை கல்வி அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படும். மூடப்படவுள்ள பள்ளிகள் சார்ந்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்" என்றார்.
