UPDATED : ஜூலை 02, 2009 12:00 AM
ADDED : ஜூலை 02, 2009 01:03 PM
அவரது அறிக்கை: அ.தி.மு.க.,வின் 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தல் அறிக்கையில் கூறப் பட்டுள்ள பல வாக்குறுதிகளை செயல்படுத்த, மத்திய அரசு முனைந்திருப் பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. 100 நாட்களுக்கான செயல் திட்டம் என்று அ.தி.மு.க., முதன் முதலில் அறிமுகப்படுத்திய கொள்கையை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி பற்றிக்கொண்டது போல் தோன்றுகிறது. அதேபோல, பலதரப்பட்ட செயல்பாடுகளுக்கு பயன்படக்கூடிய தேசிய குடிமகன், குடிமகள் அடை யாள அட்டை குறித்து சிந்தித்த ஒரே கட்சி அ.தி.மு.க., தான். இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது, அ.தி.மு.க.,வின் தொலைநோக்குப் பார்வைக்கும் தேசிய அணுகுமுறைக்கும் கிடைத்த அங்கீகாரம். நாட்டு மக்களை எழுத்தர்களாக அல்லாமல் உலகத் தலைவர்களாக உருவாக்க கல்வி முறை, பாடத் திட்டம் மற்றும் கல்வி கற்பிக்கும் முறை ஆகியவற்றில் முற்றிலும் புதுமையை புகுத்தும் வகையில் தேசிய கல்வி ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது. நமது நாட்டின் கல்வி முறையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து மத்திய அமைச்சர் கபில் சிபல் பேசுவதும், நினைப் பதும் மகிழ்ச்சி அளிப்பதாக இருப்பினும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வாரியத் தேர்வு திரும்பப் பெறப்படும்; 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாடு முழுவதும் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருப்பது தன்னிச்சையானதாகவும், தெளிவற்ற சிந்தனை உடையதாகவும் தோன்றுகிறது. தற்போது, பல பட்டயப் படிப்புகள் மற்றும் தொழிற்கல்வி ஆகியவை பயில்வதற்கு முதன்மைத் தேவையாக, பத்தாம் வகுப்பு தேர்ச்சி அமைந்துள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த தேர்வு தேவையில்லை என்று தன்னிச்சையாக அறிவித்திருப்பது, மாணவ, மாணவியரை திகைப்படையச் செய்துள்ளது. மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் இது போன்ற முடிவை மத்திய அரசே எடுத்திருக்கிறது. இந்த முடிவு, மத்திய அரசின் ஒருதலைபட்சத் தன்மையை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மாநில சுயாட்சிக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய களங்கமாகக் கருதப்படுகிறது. பொதுவான கல்வி முறை என்பது வரவேற்கத்தக்கது என்றாலும், நாடு முழுவதும் 12ம் வகுப் பிற்கு பொதுத் தேர்வு என்ற தன்னிச்சையான அறிவிப்பு, அதன் விளைவுகள் குறித்து நன்கு சிந்திக்கப்படவில்லை என்பதைத் தான் எடுத்துக் காட்டுகிறது. கபில் சிபலின் இந்த அறிவிப்பு குறித்து, மாநில சுயாட்சியின் பாதுகாவலர் என்றும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வழி நடத்தியவர் என்றும் தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தமிழக முதல்வர் வாய் திறக்காமல் மவுனம் சாதிப்பது வியப்பாக இருக்கிறது.