தமிழ்வழிச் சான்று வழங்க தடை கோரி வழக்கு: பல்கலைகளுக்கு நோட்டீஸ்
தமிழ்வழிச் சான்று வழங்க தடை கோரி வழக்கு: பல்கலைகளுக்கு நோட்டீஸ்
UPDATED : நவ 07, 2020 12:00 AM
ADDED : நவ 07, 2020 08:34 AM
மதுரை:
தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்வழியில் படித்ததற்கான சான்று வழங்க தடை கோரிய வழக்கில், பல்கலைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ் தாக்கல் செய்த மனு: தமிழ் வழியில் படித்தோருக்கு மாநில அரசுப் பணியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. குரூப் 1 தேர்விற்கு டி.என்.பி.எஸ்.சி., ஜனவரி 20 ல் அறிவிப்பு வெளியிட்டது. இதில் தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்று, தமிழ்வழியில் படித்ததற்குரிய (பி.எஸ்.டி.எம்.,) சான்று சமர்ப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது.
இவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பை தமிழ்வழியில் படித்தவர்கள் இல்லை. கல்லுாரியில் ஆங்கில வழியில் படிக்கின்றனர். பல்கலை தொலைநிலைக் கல்வியில் கூடுதலாக ஒரு பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்து, அதற்கான சான்று பெறுகின்றனர். இதில் முறைகேடுகள் நடக்கின்றன.
டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் 1 தேர்வு அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்வழியில் படித்ததற்கான சான்று வழங்க பல்கலை கழகங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, கல்லுாரி வரை தமிழ் வழியில் பயின்றவர்களை மட்டும், இடஒதுக்கீட்டில் அனுமதிக்க டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு சக்திராவ் மனு செய்தார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு டி.என்.பி.எஸ்.சி., அழகப்பா பல்கலை, அண்ணாமலை, பாரதியார், பாரதிதாசன், சென்னை பல்கலை, மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, பெரியார் மற்றும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, 2 வாரங்கள் ஒத்திவைத்தது.
