பணி நிரந்தரம் கோரி சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
பணி நிரந்தரம் கோரி சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
UPDATED : செப் 14, 2023 12:00 AM
ADDED : செப் 14, 2023 09:50 AM
சென்னை:
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கோரி, காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் துவக்கி உள்ளனர்.தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில், கற்றல் குறைபாடுடைய, 1.28 லட்சம் மாற்றுத்திறன் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு கல்வி கற்றுத்தர, சிறப்பு பயிற்றுனர் என்ற ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நேற்று, காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர்.இதுகுறித்து, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள், சங்க மாநில தலைவர் சேதுராமன் கூறியதாவது:
தமிழக அரசு பள்ளிகளில், 1998ம் ஆண்டு முதல் 1,600க்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்றுனர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் வழியே பணி அமர்த்தப்பட்டு பணியாற்றி வந்தோம். பின், 2012ல், அரசின் பள்ளிக் கல்வி துறையே, எங்களை பணியில் சேர்த்துக் கொண்டது. தற்போது, 20,000 ரூபாய் சம்பளம் பெறுகிறோம். இதை, 25,000 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். அனைத்து சிறப்பு பயிற்றுனர் ஆசிரியர்களுக்கும், முறையான பணி ஆணை வழங்கி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த ஜனவரியில் சென்னையில் போராட்டம் நடத்தினோம். அப்போது, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பேச்சு நடத்தி, விரைவில் ஆணை பிறப்பிக்கப்படும் என, உறுதி அளித்தார். ஆனால், இன்னும் சம்பள உயர்வும், பணி ஆணையும் கிடைக்கவில்லை. அதனால், மீண்டும் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
