UPDATED : செப் 14, 2023 12:00 AM
ADDED : செப் 14, 2023 09:51 AM
சென்னை:
விபத்து மீட்பு பணியின்போது, எப்படி செயல்பட வேண்டுமென, போலீசாருக்கு, சென்னை ஐ.ஐ.டி.,யில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.சென்னை ஐ.ஐ.டி. வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை ஐ.ஐ.டி.,யின், சாலை பாதுகாப்பு சீர்மிகு மையமும், சென்னை போலீசும் இணைந்து, விபத்து மீட்பு பணியில், வாகனங்களையும், அதில் சிக்குவோரையும் மீட்பதற்கான திட்டத்தை தயாரித்துள்ளன. இதற்காக, சிறப்பு வாகனத்தை சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கியுள்ளது.இந்த வாகனத்தை, கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார். இந்நிலையில், நவீன வாகனத்தை பயன்படுத்தி, விபத்து மீட்பு பணியில் எப்படி செயல்பட வேண்டும் என, சென்னை ஐ.ஐ.டி.,யில் போலீசாருக்கு, நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தில், பாதிக்கப்பட்டவர்களை, விரைவாக மீட்டு, தாமதமின்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்து விளக்கப்பட்டது.நிகழ்ச்சியில், தமிழக தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோடு, நெடுஞ்சாலை துறை கூடுதல் செயலர் பிரதீப் யாதவ், ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, சென்னை போலீஸ் போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனர் சுதாகர் ஆகியோர், பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
