UPDATED : செப் 14, 2023 12:00 AM
ADDED : செப் 14, 2023 09:54 AM
பெங்களூரு:
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், பள்ளிகள், தொழிற்சாலைகளின் வேலை நேரத்தை மாற்றுவது குறித்து மறு ஆய்வு செய்து, ஆறு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாநில அரசுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.பெங்களூரு நகரம், தேசிய அளவில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ளது. இந்நிலையில், இங்குள்ள பல்லாரி சாலையை அகலப்படுத்துவது தொடர்பாக, அரசு சாரா அமைப்பான, சகரணா சமூக கலாசார அமைப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தது.இம்மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி வராலே, நீதிபதி கிருஷ்ணா தீட்சித் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் நேற்று பிறப்பித்த உத்தரவு:
பெங்களூரில் செயல்படும் பள்ளிகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தை, அரசு கூட்ட வேண்டும். நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பள்ளி நேரங்களை மாற்றுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கலாம். இதில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்று தொழில் துறையும், அனைத்து தொழிற்சங்கங்கள், வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்புகள், நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து, பணி நேரத்தை மாற்றலாம்.பரபரப்பான நேரத்தில் வாகன போக்குவரத்தை குறைப்பது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து பரிந்துரையை பெற்ற பின், அரசு நடைமுறைப்படுத்தலாம். நடப்பு, 2023 - 2024 ஆண்டுக்கான மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு, ரயில் நேரம் நீட்டிப்பு உள்ளிட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, சமர்ப்பிக்கப்பட வேண்டும். போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்பாக, மனுதாரர் அமைப்பு அளித்துள்ள ஆலோசனைகளின் அடிப்படையில், போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை ஆறு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
