இன்ஜி., கல்லுாரிகளில் பி.பி.ஏ., பி.சி.ஏ.,; தனியார் கல்லுாரிகள் கடும் எதிர்ப்பு
இன்ஜி., கல்லுாரிகளில் பி.பி.ஏ., பி.சி.ஏ.,; தனியார் கல்லுாரிகள் கடும் எதிர்ப்பு
UPDATED : டிச 18, 2023 12:00 AM
ADDED : டிச 19, 2023 09:32 AM
கோவை:
தொழில்நுட்பம் சாராத சில படிப்புகளை இன்ஜினியரிங் கல்லுாரிகளில் 2024 - 25 கல்வியாண்டு முதல் துவங்குவது தொடர்பான ஏ.ஐ.சி.டி.இ., அறிவிப்புக்கு, தமிழக தனியார் கலை அறிவியல் மேலாண்மை கல்லுாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.உயர்கல்வித்துறையில் கலை அறிவியல் சார்ந்த கல்வி நிறுவனங்களை யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழுவும் பொறியியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அமைப்பும் கட்டுப்படுத்துகிறது.இந்நிலையில் தொழில்நுட்பம் சாராத பி.பி.ஏ., பி.சி.ஏ., ஆகிய படிப்புகளை பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரிகளில் எதிர்வரும் கல்வியாண்டு துவங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களும் தற்போது பொறியியல் கல்லுாரிகளில் பெறப்படுகின்றன.இதுகுறித்து தமிழ்நாடு தனியார் சுயநிதி கலை அறிவியல் மேலாண்மை கல்லுாரி செயலர் சேதுபதி கூறியதாவது:
தொழில்நுட்பம் சாராத படிப்புகளை இன்ஜினியரிங் கல்லுாரிகளில் துவக்குவதில் ஏன் இந்த அவசரம் காண்பிக்கப்படுகிறது. அதிலும் ஒவ்வொரு கல்லுாரிகளிலும் பி.பி.ஏ., - பி.சி.ஏ., பிரிவுகளின் கீழ் ஐந்து பிரிவுகள் வீதம், ஒரு பிரிவுக்கு 60 மாணவர்கள் வீதம் சேர்க்க அனுமதி வழங்கப்படுகிறது.இதனால் பி.பி.ஏ., பி.சி.ஏ., படிப்பு முடித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். கல்விக்கட்டணம் கணிசமாக உயர்ந்து பெற்றோருக்கு சுமை அதிகரிக்கும்.மத்திய மாநில கல்விக்கொள்கைகளின்படி ஒருங்கிணைந்த சில படிப்புகள் வழங்கும் போது பி.பி.ஏ., - பி.சி.ஏ., மாணவர்களால் தொழில்நுட்ப படிப்புகளை படிக்க இயலாது. இது போல் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. உயர்மட்ட கமிட்டி அமைத்து முதலில் ஆராய வேண்டும். அதற்கு முன் புதிய முடிவை ஏ.ஐ.சி.டி.இ., திரும்ப பெற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
