பாதுகாக்கப்பட வேண்டாமா பழமையான பாறை ஓவியங்கள்; வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தல்
பாதுகாக்கப்பட வேண்டாமா பழமையான பாறை ஓவியங்கள்; வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தல்
UPDATED : மே 04, 2024 12:00 AM
ADDED : மே 04, 2024 11:16 AM

மதுரை:
மதுரையில் உள்ள பழமையானபாறை ஓவியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிற்பத்துறை ஆய்வாளர் தேவி கூறியதாவது:
மதுரையில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரும்புக் காலத்தை சேர்ந்த சிவப்பு, வெள்ளை நிற பாறை ஓவியங்கள் உசிலம்பட்டி, அழகர்கோவில், மேலுார் உள்படமதுரையைச் சுற்றி 12க்கும் மேற்பட்ட இடங்களில் காணப்படுகின்றன.
கிடாரிப்பட்டி பாறை ஓவியத்தை காண வரும் பயணிகளில் சிலர், தங்கள் பெயர்களை எழுதி வைத்து ஓவியங்களை பாழ்படுத்தியுள்ளனர்.
மதுரை இயற்கை பண்பாட்டுக்குழுவை சேர்ந்த தமிழ்தாசன், விஸ்வா, கார்த்தி, தொல்லியல் ஆய்வாளர் அறிவுசெல்வம் ஆகியோருடன் உசிலம்பட்டி மூன்றுமலை பகுதிக்கு கள ஆய்வுக்காகச் சென்றோம்.
வெள்ளை நிற பாறை ஓவியம் இருக்கும் மூன்று மலையில் அப்பகுதி மக்கள் பத்தி, சாம்பிராணி, சூடம் பயன்படுத்தி வழிபட்டதால்,அங்கே உள்ள பாறை ஓவியங்கள்மீது கரும்புகை படிந்து பல ஓவியங்கள் மறைந்து விட்டன. அல்லிக் குண்டம் கண்மாயில் இரண்டு கல் திட்டைகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.
சின்ன குறவன்குடியில் உள்ள உசிலை காடு 16ம் நுாற்றாண்டைச்சேர்ந்த அடுக்கு நிலை நடு கல் ஒன்றும், கழுமரமும் வழிபாட்டில்உள்ளது. இவற்றை பாதுகாக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.