அங்கன்வாடி குழந்தைகள் மீது கவனம் குடிநீர் காய்ச்சி வடிகட்டி வழங்கல்
அங்கன்வாடி குழந்தைகள் மீது கவனம் குடிநீர் காய்ச்சி வடிகட்டி வழங்கல்
UPDATED : ஜூலை 20, 2024 12:00 AM
ADDED : ஜூலை 20, 2024 10:04 AM
பொள்ளாச்சி:
தொடர்மழையால், அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, குடிநீரை காய்ச்சி வடிகட்டி வழங்க வேண்டும் என, பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள, 106 அங்கன்வாடி மையங்களில், 1,780 குழந்தைகள்; தெற்கு ஒன்றியத்தில், 99 அங்கன்வாடி மையங்களில், 1,750 குழந்தைகள் வரை, முன்பருவ கல்வி பயின்று வருகின்றனர்.
தற்போது, நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு குடிநீரை காய்ச்சி வடிகட்டி வழங்க வேண்டும்; மைய வளாகத்திற்குள் மழைநீர் தேங்குவதை கண்டறிந்து தடுக்க வேண்டும் என, பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவிர, இந்த மையங்கள் செயல்படும் கட்டடத்தின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கட்டடத்தின் உறுதி தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஏதேனும் ஆபத்துக்கான சாத்தியக்கூறுகள் இருந்தால், அதனை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி வடக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா கூறியதாவது:
தொடர்மழை காரணமாக, அங்கன்வாடி குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அங்கன்வாடி கட்டடங்களில் பழுது கண்டறியப்பட்டால், சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும், குழந்தைகளுக்கு, சளி, இருமல், காய்ச்சல் என நோய் பாதிப்பு ஏற்பட்டால், டாக்டரை அணுகி சிகிச்சை பெற பெற்றோர் மற்றும் பணியாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு, குடிநீர் காய்ச்சி வழங்கப்படுகிறது.
இவ்வாறு, கூறினார்.