கல்வியாளர்களை மட்டுமே துணைவேந்தராக்க வேண்டும் ஓய்வு கல்லுாரி ஆசிரியர்கள் தீர்மானம்
கல்வியாளர்களை மட்டுமே துணைவேந்தராக்க வேண்டும் ஓய்வு கல்லுாரி ஆசிரியர்கள் தீர்மானம்
UPDATED : ஜன 23, 2025 12:00 AM
ADDED : ஜன 23, 2025 10:08 AM
மதுரை:
தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகத்தின் மதுரை கிளை செயற்குழுக் கூட்டம் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. செயலாளர் பெரியதம்பி முன்னிலை வகித்தார். இணைச் செயலாளர் ஆனந்தன் வரவேற்றார். பொருளாளர் பெருமாள், துணைத் தலைவர் குணவதி உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மத்திய அரசின் பல்கலை மானியக்குழு வரைவு அறிக்கையில் துணைவேந்தர் தேர்வு குழுவில், மதுரை காமராஜ் பல்கலையில் பின்பற்றப்படும் கல்விக்குழு, செனட், சிண்டிகேட் குழுவில் உள்ள பிரதிநிதிகள் தேர்வுக்குழுவில் பங்கெடுக்கும் முறை கடைபிடிக்கப்படுகிறது. அதனை அப்படியே கடைபிடிக்க வேண்டும்.
தமிழக அரசு, யு.ஜி.சி., சம்பந்தப்பட்ட பல்கலை பிரதிநிதிகளும் தேர்வுக்குழுவில் இடம் பெற வேண்டும். சம்பந்தப்பட்ட பல்கலையில் பணியாற்றும் மூத்த பேராசிரியர்களையும் துணைவேந்தராக நியமிக்கலாம். கல்வியாளர்களை மட்டுமே துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும்.
இளங்கலை, முதுகலை பட்டத்தில் மாணவர் சேர்க்கை சம்பந்தப்பட்ட பாடமுறையில்தான் இருக்க வேண்டும். பட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வை கட்டாயப்படுத்தக் கூடாது. கல்லுாரி, பல்கலையில் ஆசிரியர் பணியிடங்களுக்கு இப்போதுள்ள முறையே பின்பற்றப்பட வேண்டும். பல்கலைகளில் பத்து சதவீதமே ஒப்பந்தப் பணியாளர்கள் இருக்க வேண்டும். கல்லுாரி நுாலகர்களும், உடற்கல்வி இயக்குனர்களும் உதவி, துணை பேராசிரியர்கள் என மாற்றப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.