போட்டித்தேர்வு மாணவருக்கு உதவ பூண்டி கிளை நுாலகம் தயாராகிறது
போட்டித்தேர்வு மாணவருக்கு உதவ பூண்டி கிளை நுாலகம் தயாராகிறது
UPDATED : ஏப் 14, 2025 12:00 AM
ADDED : ஏப் 14, 2025 09:52 AM
திருமுருகன்பூண்டி:
திருமுருகன்பூண்டியில் கடந்த, 1965ல் பகுதி நேர நுாலகம் செயல்பட துவங்கியது. 2001 முதல், சொந்த கட்டடத்தில் செயல்படுகிறது. வாசகர் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கிய நிலையில், பூண்டி ரோட்டரி சார்பில் நுாலகத்தை ஒட்டிய காலியிடத்தில் கூடுதலாக ஒரு அறை கட்டிக் கொடுக்கப்பட்டது.
தற்போதைய சூழலில், 4,600 பேர் நுாலக உறுப்பினர்களாக உள்ளனர்; தினமும், அதிகளவில் வாசகர்கள் வந்து செல்கின்றனர். நுாலகத்துறை சார்பில் எண்ணற்ற புத்தகங்கள், அலமாரி, கம்ப்யூட்டர், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் அமர்ந்து படிக்க மேஜை, இருக்கை உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இடப்பற்றாக்குறை நீடித்த நிலையில், அரசின் சார்பில், 22 லட்சம் ரூபாய் சார்பில் இணைப்புக் கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கட்டடத்தை, 'வீடியோ கான்பிரன்ஸ்' வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
புதிதாக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அலமாரி, புத்தகங்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை பொருத்தி, அரசின் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் குறிப்பெடுக்கவும், புத்தகங்களை படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவும் திட்டமிட்டுள்ளனர் என நுாலகர் வனிதா, இரண்டாம் நிலை நுாலகர் தர்மராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.
இந்த நுாலகம், தற்போது பகுதி நேர நுாலகமாக செயல்பட்டு வருகிறது. காலை, 9:00 மணி முதல், மதியம், 12:30 மணி வரை; மதியம், 4:00 மணி முதல், 7:00 மணி வரை நுாலகம் செயல்படுகிறது. இந்நுாலகம் விரைவில் முழு நேர நுாலகமாக மாறும் வாய்ப்பு உள்ளது.