உதவியாளர் பணிக்கு தேர்வான பட்டதாரிகள் பணி ஆணை கிடைக்காமல் பரிதவிப்பு
உதவியாளர் பணிக்கு தேர்வான பட்டதாரிகள் பணி ஆணை கிடைக்காமல் பரிதவிப்பு
UPDATED : நவ 07, 2025 06:54 AM
ADDED : நவ 07, 2025 06:55 AM

புதுச்சேரி:
உதவியாளர் பணிக்கு தேர்வான 256 பட்டதாரிகள், மூன்று மாதங்களுக்கு மேலாகியும் பணி ஆணை அரசு வழங்காததால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் மொத்தம் 1,135 உதவியாளர் (அசிசெஸ்டண்ட்) பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 256 பணியிடங்கள் காலியாக உள்ளதால், நிர்வாகத்தில் பெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த காலி பணியிடங்களை நிரப்பிட பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை சார்பில், கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டது.
இத்தேர்விற்கு விண்ணப்பித்திருந்த 32 ஆயிரத்து 829 பேரில், 22 ஆயிரத்து 860 பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவு அதே மாதம் 30ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், 10 ஆயிரத்து 766 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களில் 10 ஆயிரத்து 416 பேர், கடந்த ஜூன் 22ம் தேதி நடந்த இரண்டாம் நிலைத் தேர்வை எழுதினர். இத்தேர்வு முடிவு அதே மாதம் 24ம் தேதி வெளியானது. அதில், 164 ஆண்கள், 92 பெண்கள் என, மொத்தம் 256 பேர் உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு கடந்த ஜூலை 30 மற்றும் 31ம் தேதிகளில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்து நேற்றுடன் 98 நாட்கள் ஆன போதிலும், இதுவரை அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படாமல் உள்ளது.
அதே நேரத்தில் உதவியாளர் பணிக்கு பிறகு நடந்த துணை தாசில்தார், மின்துறையில் இளநிலை பொறியாளர் மற்றும் சுகாதாரத் துறையில் பல்வேறு காலி பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு, அனைவரும் பணியில் சேர்ந்து சம்பளமும் வாங்கி விட்டனர்.
ஆனால், அனைத்து தேர்விலும் தேர்ச்சி பெற்று, பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் பணி ஆணை வழங்கப்படாமல் உள்ளதால், இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 256 பட்டதாரிகளும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

