உலகளாவிய க்யூ.எஸ்., தர வரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம் அசத்தல்
உலகளாவிய க்யூ.எஸ்., தர வரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம் அசத்தல்
UPDATED : நவ 20, 2025 08:08 PM
ADDED : நவ 20, 2025 08:10 PM

புதுச்சேரி:
உலகளாவிய க்யூ.எஸ்., பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம் அசத்தியுள்ளது.
உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலை லண்டனை அடிப்படையாக கொண்ட குவாக்குவாரெல்லி சைமண்ட்ஸ் என்ற உலகளாவிய உயர் கல்வி ஆய்வு நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
கல்வி தரம், ஆசிரியர்-மாணவர் விகிதம், ஆராய்ச்சிகள், சர்வதேச மாணவர்களின் பன்முகத் தன்மை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு திறன் சார்ந்த காரணிகளை அடிப்படையாக கொண்டு வெளியிடப்படுகிறது.
2026ம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ள சூழ்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழக துணை பதிவாளர் மகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உலகளாவிய அளவில், 1,994 பங்கேற்பு நிறுவனங்களில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 1,021-1,030 இடத்திற்குள் இடம் பெற்றுள்ளது, இது கடும் போட்டியில் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
ஆசியா பிராந்தியத்தில் பல்கலைக்கழகம் 827 நிறுவனங் களில் 361-வது இடத்தைப் பெற்றுள்ளதுடன், அதன் தொடர்ந்து வளர்ந்து வரும் பிராந்திய நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.
தேசிய அளவில், 103 இந்திய நிறுவனங்களில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 45-வது இடத்தைப் பெற்றது. மத்திய பல்கலைக்கழகங்கள் பிரிவில், பங்கேற்ற 56 மத்திய பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழகம் 7-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இது நிலையான மேலாண்மை நடைமுறைகள், திறமையான ஆளுகை, ஆராய்ச்சி மற்றும் சமூக ஈடுபாட்டிற்கான பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், பசுமை வளாக முயற்சிகள், சமூக தாக்கம் கொண்ட திட்டங்கள் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் இணைந்த ஆராய்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்முயற்சிகளுக்கு பல்கலைக்கழகம் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.
இது கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் சர்வதேசமயமாக்கல் ஆகிய துறைகளில் சிறப்பிற்காக பல்கலைக்கழகம் தொடர்ந்து பாடுபட்டதற்கான சான்றாகும். பல்கலைக்கழக ஆசிரியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு துணைவேந்தர் பிரகாஷ் பாபு வாழ்த்து தெரிவித்தார்.

