ஜனநாயகம் பாதுகாக்க வாக்காளரியல் கல்வி! லோக் ஆயுக்தா உறுப்பினர் பேச்சு
ஜனநாயகம் பாதுகாக்க வாக்காளரியல் கல்வி! லோக் ஆயுக்தா உறுப்பினர் பேச்சு
UPDATED : நவ 28, 2025 08:14 AM
ADDED : நவ 28, 2025 08:15 AM

உடுமலை:
உடுமலையில், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. உடுமலை வக்கீல்கள் சங்க செயலாளர் சிவகுமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ் பேசியதாவது: ஜனநாயகத்தின் அடித்தளமாக, ஓட்டு, வாக்காளர் மற்றும் தேர்தல் அமைந்துள்ளது. இது குறித்த கல்வியே வாக்காளரியல் கல்வியாகும்.
வாக்கு, வாக்காளர், தேர்தல்கள் ஆகிய அம்சங்களில் ஊழல் நடந்தால், ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு இல்லாதது, ஊழல் மற்றும் சர்வாதிகாரம் ஜனநாயகத்தின் எதிரிகள் ஆகும்.
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, 'வாக்காளரியல்' கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
வாக்காளர்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டால் அதைப் பெற்றுத்தரவும் வாக்காளரியல் கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்லவும் தேசிய, மாநில அளவில் வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்குள் தேர்தல் வழக்குகளை விசாரித்து முடிக்க, சிறப்பு தேர்தல் தீர்ப்பாயங்களும் அமைக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம், வாக்காளர் ஆணையம், தேர்தல் தீர்ப்பாயம் ஆகியவற்றை தேர்தல் நிறுவனங்கள் என அரசியலமைப்பில் வகைப்படுத்த வேண்டும்.
சட்டம் இயற்றும் அமைப்புகளுக்கும், ஆட்சி நடத்தும் அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது போன்ற இணையான அந்தஸ்தை, தேர்தல் நிறுவனங்களுக்கு அரசியலமைப்பு வழங்க வேண்டும். இதன் வாயிலாக வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்களில் ஏற்படும் ஊழல்களை அகற்றவும் மக்களாட்சியை பாதுகாக்கவும் இயலும். 'லோக் ஆயுக்தா' என்பதற்கும் லோக் அதாலத் என்பதற்கும் உள்ள வேறுபாடு பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.
'லோக் ஆயுக்தா' என்றால் ஊழலுக்கு எதிரான மாநில அளவிலான உயர் விசாரணை அமைப்பாகும். அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகளை சமரச பேச்சுவார்த்தை வாயிலாக தீர்த்துக் கொள்ளும் வழிமுறைக்கான அமைப்பு 'லோக் அதாலத்', ஆகும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

