மாணவர்களை எப்படி கண்டிக்க வேண்டும்? கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தல்
மாணவர்களை எப்படி கண்டிக்க வேண்டும்? கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தல்
UPDATED : ஜன 15, 2026 10:33 AM
ADDED : ஜன 15, 2026 10:34 AM
புலியகுளம்:
கல்லூரி மாணவர்களின் மனம் புண்படும்படி கடினமான வார்த்தைகளை பயன்படுத்தாமல், அவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் அறிவுரை வழங்க வேண்டும் என, கோவை மண்டல கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், கல்லூரி வளாகத்திற்குள் 'ரீல்ஸ்' எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார். கல்லூரி முதல்வர் அனைத்து மாணவிகள் முன்னிலையில், அந்த மாணவியை கண்டித்ததாக கூறப்படுகிறது. மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, தற்கொலைக்கு முயன்றுள்ளார். கல்லூரியில் விசாரணை நடத்தப்பட்டது.
மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் சண்முக லட்சுமி கூறுகையில், “இச்சம்பவம் குறித்த விசாரணையில், மாணவர்களை கண்டிக்கும்போது தகாத வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஆசிரியர்களின் கண்டிப்பை மாணவர்களும் அதிக உணர்ச்சிவசப்பட்டு அணுக வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த மாணவி கடந்த ஒரு மாதமாக, கல்லூரி ஐடி கார்டுடன் வளாகத்திற்குள் ரீல்ஸ் எடுத்து வந்துள்ளார். இதனாலேயே முதல்வர் கண்டித்துள்ளார்.
அவர்கள் விருப்பப்பட்டால் தங்கள் செல்போன்களை, அந்தந்த துறைகளில் ஒப்படைத்துவிட்டு வகுப்பிற்கு செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. செமஸ்டருக்கு இரண்டு முறை உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது,” என்றார்.

