சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் பிரிவு மாற்றி விடை எழுதினால் மதிப்பெண் கிடையாது
சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் பிரிவு மாற்றி விடை எழுதினால் மதிப்பெண் கிடையாது
UPDATED : பிப் 07, 2026 07:40 PM
ADDED : பிப் 07, 2026 07:44 PM

'இந்தாண்டு நடக்கும் பொதுத் தேர்வில், 10ம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில், பிரிவுகளை மாற்றி விடையளித்தால், மதிப்பெண் வழங்க முடியாது' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இந்தாண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, பல்வேறு புதிய நடைமுறைகள் அறிமுகமாகி உள்ளன. அவற்றில் முக்கியமாக, அவர்கள் இரண்டு பொதுத்தேர்வுகளை எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதே போல், 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகளில், பிரிவு வாரியாக உள்ள வினாக்களுக்கு, அந்தந்த பிரிவிலேயே விடை எழுத வேண்டியது கட்டாயம் என்றும், பிரிவை மாற்றி விடை எழுதினால், மதிப்பெண் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள்
இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
சி.பி.எஸ்.இ., பள்ளிகளை பொறுத்தவரை கேந்திரிய வித்யாலயாக்களைத் தவிர, மற்றவை தனியார் பள்ளிகள் தான்.
அதனால், மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை மிகவும் நுணுக்கமாகக் கற்பிக்கும் வகையில், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் பட்டப்படிப்பு முடித்த ஆசிரியர்களின் வாயிலாக பாடம் நடத்தும் வகையில், மூன்று ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
சமூக அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பாடம் நடத்துகின்றனர். அதனால், அவர்கள் மற்ற பாடங்களைப் படிப்பதோ, அவற்றின் வினா - விடை மாதிரிகளைப் பார்க்கவோ வாய்ப்பு குறைவு.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், மத்திய அரசு பள்ளிகள் என்பதால், அவற்றில் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு தலா ஒரு ஆசிரியர் தான் பாடம் நடத்துகிறார்.
நாட்டில் தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளே அதிகளவில் உள்ளதால், தனியார் பள்ளிகளில் பாடம் நடத்தும் நிலையிலேயே வினாக்களை வடிவமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டது.
காலியிடங்கள்
இந்நிலையில், இந்தாண்டு அறிவியலில், ஏ, பி, சி, எனும் மூன்று பிரிவுகளாக வினாத்தாள் பிரிக்கப்படும். அதன்படி, அறிவியல் பாடத்தில், ஏ - உயிரியல்; பி - வேதியியல்; சி - இயற்பியல் என பிரிக்கப்பட்டு, கேள்விகள் வகைப்படுத்தப்படும்.
சமூக அறிவியல் பாடத்தில், ஏ - வரலாறு; பி - புவியியல்; சி - அரசியல் அறிவியல்; டி - பொருளாதாரம் எனும் வகையில் வினாக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதே போல், 30 பக்கங்களுடன் விடைத்தாள் வழங்கப்படும். இதில், ஒவ்வொரு பிரிவாக விடையளிக்க வேண்டும்.
அதில் ஒவ்வொரு பிரிவிலும் தெரியாத வினாக்கள் இருந்தால், அவற்றுக்கு ஏற்ப காலியிடங்களை ஒதுக்கி விட்டு, அடுத்த பிரிவில் விடையளிக்க வேண்டும். கடைசியில் விடையளிக்காத காலி பக்கங்கள் இருந்தால், அவற்றின் குறுக்கே கோடு போட்டு விடலாம்.
தேர்வு முடிவுகள் வெளியான பின், மாணவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளதாக சந்தேகம் எழுந்து, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது, பிரிவு மாற்றி சரியான விடையை எழுதி இருப்பது தெரியவந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதனால், மாணவர்கள் மிகவும் விழிப்புடன் விடையளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

