டில்லி ஏ.ஐ., மாநாட்டில் போராட்டம்: காங்., இளைஞரணி பிரிவினர் கைது
டில்லி ஏ.ஐ., மாநாட்டில் போராட்டம்: காங்., இளைஞரணி பிரிவினர் கைது
UPDATED : பிப் 21, 2026 03:10 PM
ADDED : பிப் 21, 2026 03:12 PM
புதுடில்லி:
டில்லியில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடக்கும் நிலையில், கண்காட்சி அரங்குக்குள் நுழைந்த காங்கிரஸ் இளைஞரணி தொண்டர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
தலைநகர் டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், கடந்த 16 முதல் இன்று வரை ஏ.ஐ., மாநாடு நடக்கிறது. இதையொட்டி கண்காட்சியும் நடக்கிறது. மாநாட்டில், பிரதமர் மோடி நேற்று முன்தினம் உரையாற்றினார். இதில், பிரேசில், ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டின் கண்காட்சி அரங்கு - 5க்குள் நேற்று நுழைந்த 10க்கும் மேற்பட்டோர், 'டி ஷர்ட்'டை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு சிலர், சட்டை அணியாமல் இருந்தனர்.
டி - ஷர்ட்டில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. மேலும், 'இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் கோப்புகள், பிரதமர் சமரசம் செய்து விட்டார்' ஆகிய வாசகங்களும் இருந்தன.
போராட்டக்காரர்களுக்கும், அங்கிருந்த பார்வையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், கூச்சல் குழப்பம் நிலவியது. தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து, போராட்டக்காரர்களை கைது செய்தனர்.
போராட்டம் நடத்தியவர்கள் கையில் எந்த கட்சியின் கொடியையும் வைத்திருக்கவில்லை என்றாலும், அதில் பங்கேற்றவர்கள் காங்., இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் என, போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, கண்காட்சி அரங்கு முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது தான் உங்கள் அரசியலா?
நாட்டின் வளர்ச்சியை முடக்கவும், உலக அரங்கில் நம் நாட்டை அவமானப்படுத்தவும் காங்., முயற்சிக்கிறது. ஏ.ஐ., மாநாட்டில் சட்டை இல்லாமல் காங்., இளைஞர் அணியினர் போராட்டம் நடத்தியது மிகவும் கண்டனத்துக்குரியது. இது, அக்கட்சியின் விரக்தியை வெளிப்படுத்துகிறது. ராகுல் அவர்களே, அரசை குறிவைக்க நாட்டை சிறுமைப்படுத்துவது தான் உங்கள் அரசியலா?
- பியுஷ் கோயல், மத்திய வர்த்தக அமைச்சர், பா.ஜ.,

