தெலுங்கானாவுக்கும் பரவியது கடல் தாமரை புத்தக பூங்கா புகழ்
தெலுங்கானாவுக்கும் பரவியது கடல் தாமரை புத்தக பூங்கா புகழ்
UPDATED : ஏப் 09, 2026 12:53 PM
ADDED : ஏப் 09, 2026 12:56 PM
பெங்களூரு:
கடல் தாமரை புத்தக பூங்கா நுாலக புகழ், கர்நாடகாவின் பக்கத்து மாநிலமான தெலுங்கானாவுக்கும் பரவி உள்ளது. பெங்களூரில் இருந்து 580 கி.மீ., துாரத்தில் உள்ள செகந்திரா பாதில் இருந்து தமிழ் தம்பதி, நுாலகத்திற்கு புத்தகங்களை அனுப்பி வைத்து உள்ளனர்.
பெங்களூரு வாழ் தமிழர்களின் வாசிப்பு தாகத்தை போக்க, தினமலர் நிர்வாகம் எடுத்த முயற்சி தான் கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம். சிவாஜிநகர் குயின்ஸ் சாலையில் உள்ள, தினமலர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி பூத்தது. மறுநாளில் இருந்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு நுாலகம் வந்தது.
தமிழ் ஆர்வலர்கள், தமிழ் புத்தகங்களை தேடி அலைந்த தமிழர்கள், இளஞ்சிட்டுகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் உட்பட பல தரப்பினரும், தினமும் நுாலகத்திற்கு வந்து தங்கள் பொற்பாதங்களை பதித்து செல்வதுடன், புத்தகங்களை வாசித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கின்றனர்.
செகந்திராபாத் பெங்களூரில் மட்டும் தான் கடல் தாமரை புத்தக பூங்கா நுாலக புகழ் பரவியதா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்றே சொல்ல கூடிய வகையில் நிகழ்வு நடந்து உள்ளது. கர்நாடகாவின் அண்டை மாநிலமான தெலுங்கானா வரை, நுாலகத்தின் புகழ் பரவி உள்ளது.
தெலுங்கானாவின் செகந்திராபாதில் வசிக்கும் தமிழ் தம்பதியான விஸ்வநாதன் - ராஜி ஆகியோர், அங்கிருந்து நுாலகத்திற்கு 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை அனுப்பி உள்ளனர். மல்லேஸ்வரத்தில் வசிக்கும் சம்பந்தி ராமதுரைக்கு, கூரியர் மூலம் புத்தகங்களை அனுப்பினர்.
அவர், நுாலகத்திற்கு நேற்று பேரன் தருணுடன், 6, வந்து, புத்தகங்களை கொடுத்து சென்றார். தருணும் நுாலகத்தில் இருந்த, கதை புத்தகத்தை ஆர்வமாக படித்தார்.
ராமதுரை ஏற்கனவே நுாலகத்திற்கு புத்தகங்களை அன்பளிப்பாக கொடுத்தவர். இது பற்றி அறிந்த அவரது சம்பந்தியும், நாங்களும் தினமலருக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக அளிக்கிறோம் என்று உற்சாகத்துடன் கூறி அனுப்பி வைத்து உள்ளனர்.
பெங்களூரில் இருந்து செகந்திராபாத் 580 கி.மீ., துாரத்தில் உள்ளது. அங்கிருந்து நுாலகத்திற்கு புத்தகங்கள் சிட்டாய் பறந்து வந்து உள்ளது. பக்கத்து மாநிலம் வரை பரவிய, கடல் தாமரை புத்தக பூங்கா புகழ், வரும் நாட்களில் வெளிநாடு வரை பரவினாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.
ஏழு நாட்களும் பூத்து குலுங்கும்
வாரத்தின் ஏழு நாட்களும் காலை 09:30 மணி முதல் இரவு 09:30 மணி வரை, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் இயங்கும். விடுமுறை கிடையாது. நுாலகம் தொடர்பாக 93615 00327; 89715 09091 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

