கல்விக் கடன்: மிரட்டி வசூலித்தால் வங்கி மீது நடவடிக்கை
கல்விக் கடன்: மிரட்டி வசூலித்தால் வங்கி மீது நடவடிக்கை
UPDATED : ஆக 06, 2013 12:00 AM
ADDED : ஆக 06, 2013 11:06 AM
ஈரோடு: கல்விக்கடன் கேட்டு வங்கிக்கு வரும் மாணவர்களை அலையவிடுதல், கடன் பெற்ற மாணவர்களை மிரட்டி வசூலிக்கும் பணியில் வங்கிகள் ஈடுபட்டால், கலெக்டர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என எம்.பி., சிவசாமி தெரிவித்தார்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கண்காணிப்பு மற்றும் மதிப்பாய்வு குழு கூட்டத்தில், எம்.பி., சிவசாமி கூறியதாவது: "ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வங்கிகளில் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்காமல் இழுத்தடிப்பு செய்தும், திருப்பி அனுப்புகின்றனர். மாணவர்கள் வங்கி கல்விக்கடனை திருப்பி செலுத்த தாமதம் ஏற்பட்டால், ஆட்களை கொண்டு மிரட்டி வசூலிப்பது, வீடுகளில் நோட்டீஸ் ஒட்டுதலை தவிருங்கள்.
நாட்டில் பெரிய, பெரிய முதலாளிகளுக்கு 1,000 கோடி கடனை கொடுத்துவிட்டு, வசூலிக்க முடியாமல், ஆதாயத்துக்கு அவர்களுடன் துணைபோகும் வங்கி அதிகாரிகள், ஏழை மாணவர்கள் படிப்புக்கு வாங்கி கடனை கேட்டு நோட்டீஸ் ஒட்டுவது தவறு.
வங்கிகளுக்கு கல்விக்கடன் கேட்டு வந்த மனுக்கள், வழங்கப்பட்ட கடன் தொகை, நிராகரிக்கப்பட்ட மனுக்கள் பற்றிய விபரத்தை ஒருவார காலத்தில், கலெக்டர் சண்முகத்திடம், முதன்மை வங்கி அதிகாரி ஒப்படைக்க வேண்டும். மாணவர்களை இழுத்தடிப்பு செய்யும் வங்கிகள் மீது, கலெக்டர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக்கூறினார்.

