தாவரவியல் துறையின் குளறுபடியான பாடத்திட்டத்தை திருத்தம் செய்ய கோரிக்கை
தாவரவியல் துறையின் குளறுபடியான பாடத்திட்டத்தை திருத்தம் செய்ய கோரிக்கை
UPDATED : ஜூன் 27, 2014 12:00 AM
ADDED : ஜூன் 27, 2014 11:04 AM
கோவை: கோவை அரசு கலைக் கல்லுாரியின் தாவரவியல் துறையில், குளறுபடியான பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படுவதால், மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக்குறியாக உள்ளது; நடப்பு கல்வியாண்டில் திருத்தம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை அரசு கலை அறிவியல் கல்லுாரி, தன்னாட்சி அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. இங்கு, 23 இளங்கலை பட்டப்படிப்புகளும், 20 முதுநிலை பட்டப்படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. காலை, மாலை என இரு சுழற்சி முறையில், 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பாடப்பிரிவுகளுக்கான பாடத்திட்டம் கல்வி வாரியத்தில் (போர்ட் ஆப் ஸ்டடீஸ்) நியமிக்கப்பட்டவர்களால், தயாரிக்கப்படுகிறது. இக்கல்வி வாரியத்தில் அந்ததந்த துறைத் தலைவர்கள் சேர்மனாக செயல்படுவர். தவிர, பாரதியார் பல்கலையால் நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஒருவர், பாட வல்லுனர், தொழில்துறை சார்ந்தோர், முன்னாள் மாணவர் மற்றும் அந்தந்த கல்லுாரியை சேர்ந்த உதவி பேராசிரியர்கள், முனைவர்கள் என 11பேர் பாடதிட்டம் தயாரிப்பர். இது தொடர்ந்து, மூன்றாண்டுகள் பயிற்றுவிக்கப்படும்.
இந்நிலையில், அரசு கலைக் கல்லுாரியின் தாவரவியல் துறை பாடத்தொகுப்பில் குளறுபடியாக இருப்பதாக, பேராசிரியர்களும், மாணவர்களும் குற்றம் சாட்டுகின்றனர். அதாவது, 2012-13ம் கல்வியாண்டு முதல் பயிற்றுவிக்கப்படும் இந்த பாடத்திட்டத்தில், முதல் பருவத்தேர்வில் உள்ள சில பாடங்கள், அடுத்தடுத்து வரும் பருவத்தேர்வுகளிலும் இடம்பெற்றுள்ளன. இதனால், மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படும் என்பதால், பாடத்திட்டத்தை திருத்தியமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு கலைக் கல்லுாரி தாவரவியல் துறை பேராசிரியர்கள் கூறியதாவது: கடந்த, 2012-13ம் கல்வியாண்டு தயாரிக்கப்பட்ட பாடத்திட்டம் தொடர்ந்து பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதில், நிறைய குளறுபடிகள் உள்ளன. உதாரணமாக, பருவத்தேர்வு 1ல், கல்சுர் மீடியா என்ற பாடமும், யூனிட் 2ல் உள்ள டிரான்ஸ்பர்மேஷன், ஆல்கஹால், ஸ்ட்ரெப்டோமிஷின் ஆகின யூனிட் 4ல் மீண்டும் இடம்பெற்றுள்ளன.
மேலும், குறிப்பீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள 130 புத்தகங்களில், பெரும்பாலான புத்தகங்களுக்கு ஆண்டு, ஆசிரியர் பெயர் இல்லை. பல்வேறு குளறுபடிகள் அடங்கிய இந்த பாடத்திட்டத்தை இரு பிரிவு மாணவர்கள் படித்து, வெளியேறிவிட்டனர் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். இவ்வாண்டு பயிற்றுவிக்க வேண்டிய பாடத்திட்டத்தை தரவும் கல்லுாரி நிர்வாகம் இழுத்தடிக்கிறது. மாணவர்கள் கல்வித்தரம் உயர, பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு கலைக் கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) இந்திராணியிடம் கேட்டபோது, &'&'பாடத்தின் அடிப்படையை புரிந்துகொள்ளவே ஒருசில பாடப் பிரிவுகள் மீண்டும் இடம் பெறலாம். இவற்றில் குளறுபடி அதிகம் இருந்தால், அந்தந்த துறையினர்தான் கவனித்துக்கொள்ள வேண்டும்,&'&' என்றார்.