அவிநாசி ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் மாணவர்கள் பெற்றது என்ன?
அவிநாசி ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் மாணவர்கள் பெற்றது என்ன?
UPDATED : அக் 27, 2014 12:00 AM
ADDED : அக் 27, 2014 10:51 AM
திருப்பூர்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும், தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி, பல்லடத்தில் வைஸ் திருமண மண்டபத்திலும், அவிநாசியில் சந்திரா மஹாலிலும் நடந்தது.
கோவை நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள், பொதுத்தேர்வை தைரியமாகவும், தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது குறித்து அற்புதமான கருத்துக்களை வழங்கினர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறிய ஆலோசனை
கவியரசன் (தமிழ்): தாய் மொழியான தமிழை தலைமீது வைத்து, கொண்டாட வேண்டும். பெற்றோர், ஆசிரியர், சமுதாயத்துக்காக படிக்கவில்லை; உங்களுக்காக நீங்கள் படிக்கிறீர்கள் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். பல மாணவர்கள், தேர்வு நெருங்கும் நேரத்தில் மட்டுமே தமிழ் பாடத்தை படிக்கின்றனர். மற்ற பாடங்களைபோல் அல்ல. சிறு எழுத்துப்பிழை ஏற்பட்டாலும், தமிழில் மதிப்பெண் இழக்க நேரிடும்.
ஓராண்டு உழைப்பை, மூன்று மணி நேரத்தில் எழுதுகிறீர்கள்; அது, மூன்று நிமிடங்களில் திருத்தப்படுகிறது. எனவே, அடித்தல் திருத்தல் இன்றி, மிக தெளிவாக, கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும். தமிழ் முதல் தாளில், எட்டு மதிப்பெண் வினாவுக்காக, திருக்குறள், மறுமலர்ச்சி பாடல், தொடர் நிலை செய்யுளை முழுமையாக படித்திருக்க வேண்டும்.
மனப்பாட பாடல் எழுதும்போது, புத்தகத்தில் உள்ளது போன்று, அப்படியே எழுத வேண்டும். எழுதும் பாடலுக்கு நான்கு மதிப்பெண் என்றால், பாவகை குறிப்பிடுவதற்கு நான்கு மதிப்பெண் வழங்கப்படும். அணி எழுதும்போது, அணி இலக்கணம், அணி சான்றுகளை துணை தலைப்பு கொடுத்து எழுதினால், முழு மதிப்பெண் பெறலாம். ஒரு மதிப்பெண் வினாக்கள், 90 சதவீதம் பாட புத்தகத்தின் பின்னால் இருந்தே கேட்கப்படும்.
தமிழ் இரண்டாம் தாள், உரைநடை, துணைப்பாடம், மொழித்திறன், பாநயம்பாராட்டுதல் பகுதிகளை உள்ளடக்கியது; மொத்தம் 80 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் அமையும். துணைப்பாடம் எழுதும்போது, அமைப்பு முறை, கதை கோர்வை, கதாபாத்திர அறிமுகம், பழமொழி, கதைக்கு ஏற்ற திருக்குறள், முடிவுரை அவசியம்; பாநயம் பாராட்டும்போது, திறனாய்வு, சுட்டிக்காட்டுதல், கவிஞரை பாராட்டுதல் ஆகியவை கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.
விநாயக மூர்த்தி(கணிதம்): கணிதம் என்றாலே கசப்பு என்கிற மனநிலையை மாணவர்கள் மனதில் இருந்து அகற்றிவிட வேண்டும். தொடர் முயற்சியும், பயிற்சியும் இருந்தால், மிக சுலபமாக கணிதத்தில் சென்டம் எடுக்கலாம். வால்யூம் 1, 2 பாடப்புத்தகத்தின் பின்னால் உள்ள கேள்விகளுக்கு விடை தெரிந்திருந்தாலே, அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களுக்கும் விடை அளிக்க முடியும்; 41 மதிப்பெண்கள் எளிதாக பெறலாம்.
ஆறு மதிப்பெண் வினாக்கள், மூன்று மூன்றாக பிரித்து கேட்கப்படும். நெடுவினாக்களுக்கு விடை அளிப்பதற்காக, 6 மற்றும் ஒன்பதாவது பாடங்களை முழுமையாக பயிற்சி செய்து கொள்ள வேண்டும். தேவையான இடங்களில், படங்கள் வரைந்து, பட விளக்கம் அளிக்க வேண்டும். 1, 2, 3 மற்றும் கடைசி இரண்டு பாடங்களை படித்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக 6 மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும். வால்யூம் 1ஐ முழுமையாக படித்திருந்தால், 10 மதிப்பெண் வினாக்களை தைரியமாக எதிர்கொள்ளலாம்.
நீங்கள் 200க்கு 200 மதிப்பெண்ணுக்கு தேர்வு எழுதவில்லை; 286க்கு, 200 மதிப்பெண்ணுக்குதான் விடை அளிக்க வேண்டும். 86 மதிப்பெண் வினாக்கள் உங்கள் சாய்ஸ்க்காக விட முடியும். தேர்வு நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, தினமும் காலை மற்றும் இரவு நேரம் 15 நிமிடம் வீதம், நாளொன்றுக்கு 30 நிமிடம் ஒதுக்கி, கடினமான பாடங்களை பயிற்சி செய்ய வேண்டும். மனப்பாடம் செய்தால், தேர்வறையில் அனைத்தும் மறந்துபோகும். ஒவ்வொரு பாடத்தையும் நன்கு புரிந்து, மனதில் பதிய வைக்க வேண்டும்.
ரமேஷ் பிரபு (வேதியியல்): கெமிஸ்ட்ரி என்ற வார்த்தையை, கெம், ஐஸ், டிரை என பிரிக்கலாம். அதாவது, கெமிக்கல் குறித்து தெரிந்துகொள்ள முயற்சி செய்வது என பொருள். மற்ற பாடங்களை விட, வேதியியலில் பாடங்கள் எண்ணிக்கை சற்று அதிகம்; ஆனால், தொடர்ந்து முயற்சி செய்தால், வேதியியல் பாடம் மிக சுலபமானது. பாடங்களை ஒருபோதும் மனப்பாடம் செய்யக்கூடாது.
இதனால், எவ்வித பயனும் ஏற்படாது. வேதியியலில் சென்டம் எடுப்பது மிகவும் சுலபம். அதேநேரம், உயர்கல்வி, வேலைக்காக செல்லும்போது, வெறும் மதிப்பெண் மட்டும் உதவாது; புரிதல் அவசியம். பாடங்களை படிக்கும்போது, ஒப்பீடு செய்தும், உதாரணங்களை மனதில் பதிய வைத்து படித்தால் ஒருபோதும் மறக்காது.
நிர்மலா (உயிரியல்): உயிரியல் தேர்வில், ஏழு சிறு வினாக்கள் கொடுக்கப்படும்; 4 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். அதில் ஒன்று கண்டிப்பாக விடையளிக்க வேண்டிய வினாவாக அமையும். பெரும்பாலும் இக்கேள்வி, பயோ டெக்னாலஜி பாடத்தில் இருந்து வரும். ஐந்து மதிப்பெண் வினாக்கள், பாடம் 1, 2, 3, 4ல் இருந்து கேட்கப்படும்; ஐந்தாவது பாடத்தில் இருந்து மட்டும், கண்டிப்பாக இரண்டு ஐந்து மதிப்பெண் வினா கேட்கப்படும்.
விரிவாக விடையளிக்கும் பகுதியில், நான்கு வினாக்களில் இரண்டு வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். இதற்கு, 1, 2, 4 மற்றும் 5வது பாடங்களை படித்திருக்க வேண்டும். விலங்கியலில் 75 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்படும். 12 கேள்விகளில், 8 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்; இதற்காக, 1, 3, 6வது பாடங்கள் படிக்க வேண்டும். சுற்றுச்சூழலியல், அப்ளைடு பயாலஜி, ஹியூமன் பிஸியாலஜி போன்ற கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன. முழுமையாக படித்திருந்தாலும், படித்தவற்றை தேர்வில் எப்படி சமர்ப்பிக்கிறோம் என்பதை பொறுத்தே, மதிப்பெண் கிடைக்கும். விடை எழுதும்போது, நேர்த்தியாகவும், தவறுகள் இன்றி எழுத வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்கு 20 நிமிடம் முன்னதாக விடை எழுதிவிட்டு, ஓரிரு முறை விடையை ஆய்வு செய்ய வேண்டும்.
பிரவிதா (கம்ப்யூட்டர் சயின்ஸ்): கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம், ஸ்டார்ட் ஆபீஸ், சி-பிளஸ் பிளஸ் ஆகிய இரு பகுதிகளை கொண்டது. பகுதி ஒன்றில் இருந்து 95 மதிப்பெண்; பகுதி இரண்டில் இருந்து 80 மதிப்பெண் என மொத்தம் 175 மதிப்பெண்ணுக்குள் கேள்வி கேட்கப்படும். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை எழுதுவதற்கு, பாடப்புத்தகத்தை வரி விடாமல் படிக்க வேண்டும். ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு விடை அளிக்க, 3, 4, 7, 8, 9வது பாடங்கள் கைகொடுக்கும். 4, 9வது பாடங்களை முழுமையாக படித்தால், பாராகிராப் கேள்விகளுக்கு விடை எழுதி விடலாம். குறைந்தபட்சம் 10 "எரர்களை படித்து வைத்திருக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில், ஓ.எம்.ஆர்., விடைத்தாள் கொடுக்கப்படும். அதற்கு, எச்.பி., பென்சில் அல்லது கருப்பு மை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். விடைகளை ஷேடு செய்யும்போது, தவறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். பிரிவு ஏயில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, 75 நிமிடங்களில் விடை அளித்து விட்டால், மீதமுள்ள கேள்விகளை எதிர்கொள்ள, போதுமான நேரம் கிடைக்கும். தேர்வு எழுதியபின், மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

