UPDATED : ஜன 26, 2024 12:00 AM
ADDED : ஜன 26, 2024 12:06 PM
பூந்தமல்லி:
சென்னை புறநகரில், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து, நாள் ஒன்றுக்கு 320 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளியூர் மற்றும் உள்ளூர் பயணியர் பயனடைந்து வருகின்றனர்.நேற்று முன்தினம், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து பிராட்வே செல்ல, தடம் எண்: 53 அரசு பேருந்து தயாராக இருந்தது. அப்போது, அங்கு வந்த அரசு பள்ளி மாணவர்கள் சிலர், அந்த பேருந்தின் மீது ஏறி, ரீல்ஸ் மோகத்தில் வீடியோ மற்றும் செல்பி எடுத்தனர்.இதை பேருந்து நடத்துனர் ஒருவர் வீடியோ எடுத்த போது, அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. தற்போது அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.சமூக வலைதளங்களை பயன்படுத்தும் மோகத்தில், மாணவர்கள் சிலர் இவ்வாறு நடந்து கொள்வது, பயணியரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பூந்தமல்லி போலீசார், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மவுனம் காப்பதால், பயணியர் அச்சத்தில் உள்ளனர்.