புதுமை பெண் திட்டம் அரசு உதவி பள்ளிகளுக்கும் விரிவாக்கம்
புதுமை பெண் திட்டம் அரசு உதவி பள்ளிகளுக்கும் விரிவாக்கம்
UPDATED : மார் 16, 2024 12:00 AM
ADDED : மார் 16, 2024 09:54 PM
ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவியர், உயர்கல்வி படிப்பதை உறுதி செய்வதற்காக, மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் புதுமை பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில், 2.73 லட்சம் மாணவியர் மாதந்தோறும் 1,000 ரூபாய் பெறுகின்றனர்.இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின், உயர்கல்வியில் முதலாம் ஆண்டு மாணவியர் எண்ணிக்கை நடப்பாண்டில் 34 சதவீதம் அதிகரித்து, கூடுதலாக 34,460 மாணவியர் கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர். இத்திட்டம் வரும் கல்வியாண்டு முதல், அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கும் மாணவியரும் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்படும் என, 2024 - 25ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.அதை செயல்படுத்த, சமூக நலத்துறை கமிஷனர், அரசுக்கு கருத்துரு அனுப்பினார். அதை பரிசீலனை செய்த அரசு, வரும் கல்வியாண்டில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவியருக்கு, புதுமை பெண் திட்டத்தை விரிவுப்படுத்தி செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது.இதற்கான அரசாணையை, சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீமுரளிதரன் வெளியிட்டுள்ளார். இதனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கும், 23,560 மற்றும் சிறுபான்மை பள்ளி மாணவியர் உட்பட மொத்தம் 49,664 மாணவியர் பயன்பெறுவர்.