UPDATED : மார் 16, 2024 12:00 AM
ADDED : மார் 16, 2024 09:39 PM
சென்னை:
அமெரிக்க எழுத்தாளர் மாயா ஆஞ்சலோவின் இரண்டு நுால்கள், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகத்தில் நேற்று வெளியிடப்பட்டன.ஆப்ரிக்க - அமெரிக்க கருப்பின பெண் எழுத்தாளர், நடிகை, சமூக செயல்பாட்டாளர் என பன்முகம் உடையவர் மாயா ஆஞ்சலோ. இவர், வெள்ளையர்களால் அடிமைப்படுத்தப்பட்ட கருப்பினத்தவரின் உரிமைகளுக்காக போராடிய, மார்டின் லுாதர் கிங் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து செயலாற்றியவர்.இவர், பெண்களுக்கான சுய ஊக்க நுால்களை எழுதியவர். இவர் அமெரிக்காவின் உயரிய விருதான, அதிபர் விடுதலை விருதை பெற்றுள்ளார். இவரின் கவிதை தொகுப்பை, என்றாலும் நான் எழுதுகிறேன் என்ற தலைப்பில் ஆர்.சிவகுமாரும், இவரின் சுய சரிதை நுாலை, கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும் என்ற தலைப்பில் பெர்னார்ட் சந்திராவும் மொழி பெயர்த்தனர்.இவற்றை, காலச்சுவடு பதிப்பகமும், சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகமும் பதிப்பித்தன. இந்த நுால்களை அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவலகத்தின் ஊடக பிரிவு துணை இயக்குனர் ஆன் சேஷாத்ரி நேற்று வெளியிட்டார்.மேற்கு வங்க முன்னாள் கவர்னர் கோபால்கிருஷ்ண காந்தி, மற்றும் எழுத்தாளர் சல்மா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.நிகழ்ச்சியில், நாட்டில் உள்ள அமெரிக்க துாதரகத்தின் பொது உறவு அமைச்சக ஆலோசகர் குளோரியா பெர்பனா, சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்தின் பொது உறவு அலுவலர் ஸ்காட் ஹார்ட்மன், செய்தி தொடர்பாளர் சமந்தா ஜாக்சன், காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நுால்களை வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவலகத்தின் ஊடக பிரிவு துணை இயக்குனர் ஆன் சேஷாத்ரி பேசுகையில், நுாலாசிரியரின் சகிப்புத்தன்மை, அநீதிக்கு எதிரான போராட்டம், வெற்றிக்கான உறுதி உள்ளிட்டவை, உலகப் பெண்களுக்கும் சக மனிதர்களுக்குமான ஊக்க சக்தியை தரும் என்றார்.