கருத்தரங்கு நிகழ்வில் மது பரிமாற்றம் நிபந்தனைகளுடன் திருத்த அறிவிப்பு
கருத்தரங்கு நிகழ்வில் மது பரிமாற்றம் நிபந்தனைகளுடன் திருத்த அறிவிப்பு
UPDATED : மார் 19, 2024 12:00 AM
ADDED : மார் 19, 2024 09:31 AM
சென்னை:
கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில், மது பரிமாற்றத்துக்கு நிபந்தனைகளுடன் உரிமம் வழங்குவது தொடர்பாக, திருத்தப்பட்ட அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.திருமண மண்டபம், வணிக வளாகம், விளையாட்டு நிகழ்வுகளில், மதுபானங்கள் பரிமாற வசதியாக, மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.அரசாணை
பின், திருமண மண்டபம் உள்ளிட்ட பொது இடங்களில், மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில், புதிய அரசாணை வெளியிடப்பட்டது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை தலைவர் கே.பாலு, பொதுநல வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது.இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளின் போது, மதுபானம் வினியோகிக்கும் வகையில், சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக பிறப்பித்த திருத்த அறிவிப்பாணையை தாக்கல் செய்தார்.மறைவான இடம்
அதன்படி, சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளின் போது, தனி இடத்தில் தான் மது வினியோகிக்க வேண்டும்; அந்த இடங்கள் மறைவாக இருக்க வேண்டும். வேறு பகுதிகளில் வினியோகிக்க கூடாது என, அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.இதையடுத்து, இந்த அறிவிப்பாணையை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்கும்படி, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா கோரினார். விசாரணையை, வரும் 20க்கு முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.