ஐ.டி., ஊழியர்களுக்கு குறிவைக்கும் டுபாக்கூர் சி.பி.ஐ., அதிகாரிகள்
ஐ.டி., ஊழியர்களுக்கு குறிவைக்கும் டுபாக்கூர் சி.பி.ஐ., அதிகாரிகள்
UPDATED : ஏப் 04, 2024 12:00 AM
ADDED : ஏப் 04, 2024 03:55 PM
சென்னை:
சி.பி.ஐ., அதிகாரிகள் போல நடித்து பணம் பறிக்கும் 'சைபர் கிரைம்' கும்பல், ஐ.டி., நிறுவன ஊழியர்களை குறி வைத்து செயல்படுவது தெரியவந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் கண்ணன் மகாதேவன். இவர், பெங்களூரில் பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில், சீனியர் மேலாளராக பணிபுரிகிறார். இவரிடம், சைபர் கிரைம் குற்றவாளிகள், ஒரு லட்சம் ரூபாய் சுருட்ட முயன்றுள்ளனர்.
இதுகுறித்து, கண்ணன் கூறியதாவது:
இரு தினங்களுக்கு முன், என் மொபைல் போனுக்கு, குரல் பதிவு செய்யப்பட்ட குறுஞ்செய்தி வந்தது. அதில், உங்கள் மொபைல் போன் எண்களை பிளாக் செய்யப் போகிறோம். மேலும் தொடர்புக்கு எண் 9 ஐ அழுத்தவும் என, கூறப்பட்டு இருந்தது.
ஒன்பதை அழுத்தினால், எதிர்முனையில் பெண் ஒருவர் பேசினார். உங்கள் மீது, மும்பை போலீசில், 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீங்கள் உடனடியாக காவல் நிலையம் வாருங்கள் என கூறினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பின், அந்த பெண், இணைப்பை சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு அனுப்புவதாகக் கூறினார்.
அப்போது பேசிய நபர், நம் மீது அக்கறை உள்ளவர் போல, உங்களுக்கு எதிரிகள் இருக்காங்களா; அம்மா எப்படி இருக்காங்க? என்றெல்லாம் கேட்டுவிட்டு, 'நீங்கள் மும்பையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் சிம் கார்டு வாங்கி உள்ளீர்கள். அதன் வாயிலாக, எதிரிகள் உங்கள் ஆதார் எண்ணை திரட்டி உள்ளனர்.
உங்கள் வங்கி கணக்கில் இருந்து, 5 கோடி ரூபாய் வரை சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. கைது நடவடிக்கையை தவிர்க்க, உங்கள் அறையில் யாரையும் அனுமதிக்காமல், ஸ்கைப் வாயிலாக விசாரணைக்கு ஆஜராகுங்கள்' என உத்தரவிட்டார்.
அதன்படி, ஆஜரானேன். உங்களை கைது செய்யாமல் இருக்க, நீதிபதியிடம் அனுமதி பெற வேண்டும்.
அதற்கு நான் தெரிவிக்கும் வங்கி கணக்கில், ஒரு லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யுங்கள் என்றார். இது டுபாக்கூர் வேலை என, அப்போதே எனக்கு புரிந்து விட்டது. ஒரு லட்சம் ரூபாயில் துவங்கி, கடைசியில் 1,000 ரூபாயாவது அனுப்புங்கள் என கேட்டனர்.
எனக்கு மட்டுமல்ல; இதுபோல மென்பொருள் நிறுவன ஊழியர்கள் பலரை குறிவைத்து, மோசடி கும்பல் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.