அரசு பள்ளிகளில் பத்தாயிரத்தை கடந்த முதல் வகுப்பு சேர்க்கை
அரசு பள்ளிகளில் பத்தாயிரத்தை கடந்த முதல் வகுப்பு சேர்க்கை
UPDATED : ஏப் 17, 2024 12:00 AM
ADDED : ஏப் 17, 2024 10:44 AM
கோவை:
கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2024--25ம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில், வழக்கத்தைவிட முன்னதாகவே, சேர்க்கை பணியை துவங்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மார்ச் 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை துவங்கியது.
ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்கள், புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பதற்காக ஆசிரியர்கள், ஊழியர்கள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை, பொள்ளாச்சி மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றார்.