பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை கூடாது: வழிமுறைகளை பின்பற்ற உத்தரவு
பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை கூடாது: வழிமுறைகளை பின்பற்ற உத்தரவு
UPDATED : ஏப் 26, 2024 12:00 AM
ADDED : ஏப் 26, 2024 10:22 AM

சென்னை:
பள்ளி குழந்தைகளுக்கு தண்டனை விதிப்பதை ஒழிக்கும் வகையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வகுத்த வழிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்தும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா, போடிபட்டியைச் சேர்ந்த காமாட்சி சங்கர் ஆறுமுகம் தாக்கல் செய்த மனுவில், 'பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு தண்டனை விதிப்பதை ஒழிக்கும் வகையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வழிமுறைகளை வகுத்துள்ளது. அவற்றை கண்டிப்புடன் பின்பற்ற, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
தடை விதிப்பு
மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:
பள்ளி குழந்தைகளுக்கு எந்த வடிவத்திலும் தண்டனை வழங்குவதை ஏற்க முடியாது; குழந்தைகள் உரிமை சட்டத்தில், இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவது தீர்வாகாது.
நியாயமற்ற செயல்களால், குழந்தைகளை கட்டுப்படுத்துவது எந்த பலனும் அளிக்காது. அவர்களுக்கு அதிக தீங்கை தான் ஏற்படுத்தும். குழந்தைகளை கையாள, பொறுமை முக்கியம்.
குழந்தைகளின் விருப்பங்கள், எண்ணங்களை காது கொடுத்து கேட்க வேண்டும். தண்டனை வாயிலாக அவர்களின் குரலை, எண்ணங்களை ஒடுக்குவது சரியான தீர்வாகாது. ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானவர்கள்.
ஒரே மாதிரியான பொதுவான நடைமுறையை, அனைத்து குழந்தைகளிடமும் கையாள முடியாது. குழந்தைகளின் உரிமைகள், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. குழந்தைகளின் நலன், மனநலம், சுற்றுச்சூழலை கண்காணிக்க வேண்டும்.
குழந்தைகளின் உரிமையை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்டுவதாகவும், பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை விதிப்பதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, பள்ளி குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை ஒழிக்கும் வகையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வகுத்த வழிமுறைகளை அமல்படுத்த, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிடப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், இந்த வழிமுறைகளை தெரியப்படுத்த வேண்டும். வழிமுறைகளை பின்பற்றி குழந்தைகளின் மனநலனை பாதுகாக்கும்படி, விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்.
வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, கருத்தரங்கம், முகாம்களை நடத்த, மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத்தலை வழங்க வேண்டும்.
அதிகாரிகள் கடமை தவறினால், அவர்களுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளை மறைமுகமாக துன்புறுத்தினாலும், அவர்களின் மனநலனை பாதிக்கும் வகையில் சூழ்நிலையை ஏற்படுத்தினாலும், அதை கவனத்தில் எடுத்து, தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கண்காணிப்பு குழு
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் வழிமுறைகளை திறமையாக அமல்படுத்த, அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்புக் குழு அமைக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் உத்தரவிட வேண்டும். இதுகுறித்த சுற்றறிக்கையை, ஐந்து வாரங்களில் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
உத்தரவை அமல்படுத்தியது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, விசாரணையை, ஜூன் 14க்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தள்ளி வைத்து உள்ளார்.